2016 நவம்பர் 8 பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டோம். பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு தான் அது. அந்த ரூபாய் நோட்டுகளுக்கு பதில் புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு தற்போது 5 ஆண்டுகள் கடக்கப்போகிறது. பழைய நோட்டுகளை மாற்ற போதிய அவகாசம் தரப்பட்டு, புதிய நோட்டுகள் தரப்பட்டன.
ஆனால் இன்றும் பழைய ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாய், கட்டு கட்டாய் பதுக்கப்பட்டு, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டு வரும் அதிர்ச்சி தகவல் தற்போது கிடைத்துள்ளது. செங்கல்பட்டை சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி வரலட்சுமி தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். தொண்டு நிறுவனம் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு முதியோருக்கு தேவையான வசதிகள் செய்து தருவதாக கூறி நிதி வசூலித்துள்ளார்.
பெரும்பாலும் இது போன்ற சில தொண்டு நிறுவனங்கள் முறையான கணக்கு வைத்திருப்பதில்லை என்கிற பேச்சு பரவலாக இருக்கும். அது வரலட்சுமி விசயத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பிற்கு முன் பெரிய அளவிலான தொகை வரலட்சுமியிடம் இருந்துள்ளது. அறிவிப்புக்கு பின் குறிப்பிட்ட தொகையை அவர் மாற்றியதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் மாற்றப்படும் ஒவ்வொரு நோட்டும் வரி வரம்பிற்கு உட்பட்டது என்பதால் அனைத்தையும் மாற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட தொகையை அப்படியே பதுக்கியுள்ளார்.
நிலை அடுத்தடுத்து மாறும் மீண்டும் பழைய ரூபாய் நோட்டு புழக்கத்தில் வரும் என எதிர்பார்த்திருந்த வரலட்சுமிக்கு கடைசி வரை ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான், தனக்கு கீழ் பணியாற்றும் அசோக் என்பவரிடம் பணத்தை மாற்றுவதற்கான வழி கேட்டுள்ளார். அவர் மூலம் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவோர் பற்றிய விபரம் சேகரிக்க துவங்கினர்.
அப்படி நண்பர்கள் மூலம் அறிமுகமானவர் தான் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் அருள் சின்னப்பன். தனக்கு ரிசர்வ் வங்கியில் ஆள் இருப்பதாகவும் அவர்கள் மூலம் பணத்தை மாற்றித் தருவதாகவும், அதற்கு குறிப்பிட்ட அளவு தொகை தனக்கு கமிஷனாக வழங்க வேண்டும் என வரலட்சுமியிடம் பேரம் பேசியுள்ளார் அருள் சின்னப்பன்.
இருதரப்பும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பணத்தை மாற்ற முன்வந்தனர். அவர்களின் திட்டப்படி வரலட்சுமி வசம் இருந்த 4.8 கோடி ரூபாய் மதிப்புள்ள செல்லாத பழைய நோட்டுகளை 4 பேக்குகளில் எடுத்துக் கொண்டு, செங்கல்பட்டிலிருந்து காளையார்கோவிலுக்கு அசோக் உடன் புறப்பட்டார் வரலட்சுமி. பணத்தை எடுத்து செல்வதற்கு தனக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம் உதவி கேட்டுள்ளார் அருள் சின்னப்பன். அவரும் அதற்கான ஏற்பாடுகளை செய்த போது தான், போலீசாருக்கு இந்த தகவல் கசிந்தது.
காளையார்கோவில் கூடியிருந்த வரலட்சுமி, அசோக், அருள் சின்னப்பன் ஆகியோரை கைது செய்த காளையார்கோவில் போலீசார் அவர்களிடமிருந்து நான்கு பேக்குகளில் இருந்த செல்லாத நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம் போலீசாருக்கு இரண்டு விதமாக அதிர்ச்சியளித்தது. ஒன்று, இன்னும் செல்லாத நோட்டுகள் பதுக்கப்படுகிறது என்பது. மற்றொன்று பழைய நோட்டுகள் கமிஷன் அடிப்படையில் மாற்றப்படுகிறது என்பது. இவை இரண்டுமே கற்பனைக்கு எட்டாதவை என்பது தான் ஆனாலும் நிஜத்தில் நடக்கிறது.
கடைகோடியான காளையார்கோவிலில் அமர்ந்து கொண்டு ரிசர்வ் பேங்க் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடிகிறது என்றால் ஓட்டை அனைத்திலும் பரவியிருக்கிறது என்று தான் அர்த்தம். செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற பெரிய அளவில் தேசிய அளவிலான ஒரு கும்பல் செயல்படுகிறது என்பது இந்த சம்பவம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதை ஒரு சம்பவத்தோடு ஒப்பிட முடியாது. காரணம், ஏற்கனவே இது போல நடந்ததை அறிந்து தான் வரலட்சுமி பணத்தை மாற்ற வந்துள்ளார். அப்படியென்றால் பெரிய அளவிலான பணம் மாற்றும் பரிவர்த்தனை நடந்து வந்துள்ளது.
விசாரணையில் அருள் சின்னப்பனும் அதை ஒப்புக் கொண்டுள்ளார். அது மட்டுமின்றி தனக்கு தொடர்பில் இருக்கும் நபர்கள் குறித்தும் தெரிவித்துள்ளார். என்ன நோக்கத்திற்காக பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதோ, அதை கடந்து வரி ஏய்ப்பு செய்தவர்களின் கருப்பு பணம், வெள்ளையாக மாறிக் கொண்டிருக்கிறது. ஓட்டையை அடைக்காத வரை பதுக்கப்பட்ட கட்டுகள் வந்து கொண்டே தான் இருக்கும்.