சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த காரைக்காட்டில் தமிழ்நாடு மதுவிலக்கு சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடி வழியாக கர்நாடக, தமிழகத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினமும் கடந்து செல்கின்றன. இதேபோல் மற்ற மாநிலங்களை சேர்ந்த வாகனங்களும் இந்த சோதனை சாவடியை கடந்து கர்நாடக மாநிலம் செல்கின்றன.
வடமாநிலத்தவர் ஆன்மீக சுற்றுலா:
இந்த சோதனை சாவடியில் போலீஸார் மேற்கொள்ளும் வாகன சோதனையில் மது, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் வாகனங்கள் சோதனையில் அடிக்கடி சிக்குகின்றன. இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் பிரேக்யராஜ் மாவட்டத்தை சேர்ந்த 43 பேர் சொகுசு பேருந்தில் 35 நாட்கள் ஆன்மீக சுற்றுலா வந்துள்ளனர்.
இதையும் படிங்க: School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
போலீசார் சோதனை:
தமிழகத்தில் காஞ்சி, ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மதுரை ஆகிய இடங்களை பார்வையிட்டனர். பின்னர், 22- வது நாளான இன்று காலை கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலைக்கு மேட்டூர் அருகே தமிழக - கர்நாடக எல்லையான காரைக்காடு சோதனை சாவடி வழியாக சென்றனர். அப்போது காரைக்காடு மதுவிலக்கு சோதனை சாவடியில் போலீஸார் சொகுசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.
குறிப்பாக பணி மாற்றும் நேரம் என்பதால் சோதனைச் சாவடியில் போலீஸார் அனைவரும் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் இருந்தனர். இந்நிலையில் சுற்றுலா பேருந்து ஓட்டுநரிடம், போலீஸார் வாகனத்தின் ஆவணங்களை கேட்டுள்ளனர். மேலும், பேருந்தின் ஒட்டுநரிடம் சோதனை சாவடியை கடந்து செல்ல பணம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
போலீசார் காயம்:
இந்நிலையில் உத்தரப் பிரதேச சுற்றுலா பயணிகளுக்கு, சோதனை சாவடி காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், வடமாநில சுற்றுலா பயணிகள் இரும்பு ராடு கொண்டு போலீஸாரை தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் தலைமை காவலர்கள் சுகனேஸ்வரன், செந்தில்குமார் ஆகிய போலீஸார் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
இதையும் படிங்க: TN Rain: சென்னையில் இரவு வெளுத்த மழை.! தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்குமா.?
இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் போலீஸாருக்கு ஆதரவாக சென்று, சுற்றுலா பயணிகளை தடுத்து, அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில் வட மாநிலத்தை சேர்ந்த 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த கொளத்தூர் காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட சுற்றுலா பேருந்து ஓட்டுநர் சிவ நாராயண் (52), அஜய் (20) உள்பட 4 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சொகுசு பேருந்தையும் கொண்டு வந்து காவல் நிலையம் அருகே நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினரை தாக்கியது மற்றும் பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும் காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.