சேலத்தில் ஆன்லைன் மோசடி கும்பல், இளைஞர் ஒருவரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, உறவினர்கள் எண்ணிற்கு அனுப்பியதால் அதிர்ச்சியில் உறைந்த இளைஞர். இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார். சேலம் மாவட்டம் சங்ககிரி புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஷ்ணுப்பிரியன் டிப்ளமோ படித்துவிட்டு எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதை கிளிக் செய்து திறந்து உள்ளார். 



அப்பொழுது புதிய செயலி ஒன்று பதிவிறக்கம் ஆகியுள்ளது. அதில் 6 ஆயிரம் கடன் பெற்று உள்ளீர்கள் அதை செலுத்த வேண்டும் என்ற செய்தி வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக வடமாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர், இந்தியில் வாங்கிய கடனை செலுத்துமாறு பேசியுள்ளார். பின்னர் விஷ்ணுபிரியன் எந்தக் கடனையும் பெறவில்லை என மறுத்துக் கூறி தொடர்பை துண்டித்து உள்ளார். உடனே அவரது சமூக வலைதளங்களில் உள்ள புகைப்படங்களை எடுத்து மார்பிங் செய்து, ஆபாசமாக சித்தரித்து விஷ்ணுபிரியனின் தொடர்பில் உள்ள தொலைபேசி எண்ணிற்கு புதிய படங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விஷ்ணுபிரியன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதனிடையே சைபர் கிரைம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் புகாரின் அடிப்படையில் புகைப்படங்கள் பகிரப்பட்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டதில், அப்போது இந்தியில் பேசிய மர்ம நபர் ஒருவர் காவல்துறையினரை ஆபாசமாக திட்டி பேசினார். உடனே சைபர் க்ரைம் காவல்துறை என எச்சரித்தும், உன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறித்து தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் உன்னை பிடித்து உன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். 



பின்னர் சைபர் கிரைம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் கூறுகையில், புதிய எண்ணில் இருந்து வரும் எந்த லிங்கை கிளிக் செய்யக்கூடாது. அதுமட்டுமின்றி அரசால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியின் செயலிகள் மூலமாக மட்டுமே கடன் பெற வேண்டும். அதைக்காட்டிலும் வங்கியில் நேரடியாக சென்று அவர்களின் விதிமுறை மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடனை பெற்றுக் கொண்டாள் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாது. இதனை மீறுபவர்கள் மட்டுமே இவ்வாறு சம்பவங்கள் நடைபெறும் என்று கூறினார். இதுபோன்று மிரட்டல் வந்தால் உடனே 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் வழங்கினார்.