இந்திய ரயில்வே துறை பணிகள் சேவை மட்டுமின்றி, சரக்கு ரயில் போக்குவரத்து சேவையையும் மேற்கொண்டு வருகிறது. அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயில் தனது சேவையை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை நோக்கி புறப்பட்டது. இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சரக்குகள் பார்சல் பெட்டியில் சுமார் 60 பார்சல்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த பார்சல்களில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான விலையுயர்ந்த பட்டுப்புடவைகள் இருந்தது.


இந்த ரெயில் மறுநாள் 15-ந் தேதி சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வந்தது. பயணிகள் அனைவரும் சென்றபிறகு, ரயில்வே பணியாளர்கள் பார்சல் பெட்டியைத் திறக்க முயற்சித்தனர். ஆனால், அதன் கதவுகள் திறக்க முடியாமல் இருந்தது. இதையடுத்து, ரயில்வே பாதுகாப்பு படையினர் உதவியுடன் கதவை உடைத்த ரயில்வே ஊழியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.


அப்போது, பார்சல்கள் அனைத்தும் கலைந்து அதில் இருந்த புடவைகள் கொள்ளையடிக்கப்பட்ட இருந்தது. மேலும், பார்சல் பெட்டியின் மேலே ஒரு நபர் சென்று வரக்கூடிய அளவிற்கு துளை இருந்தது. அந்த துளையானது பார்சல் பெட்டிக்கு அருகில் இருந்த பயணிகள் பெட்டியின் கழிவறையில் சென்று முடிந்தது.


பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் பயணிகள் பெட்டியின் கழிவறையின் மேல்பகுதியில் இருந்த பிளைவுட்டை கூர்மையான கத்தியால்  அறுத்து துளையிட்டு, அதன் வழியே ஊர்ந்து சென்று அருகில் இருந்த பார்சல் பெட்டிக்குள் இறங்கி, அங்கு 12 பார்சல்களில் இருந்த பட்டுப்புடவைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.


இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புபடை போலீசார், தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினர். போலீசார் விசாரணையில் எந்தவொரு குழுவும் கிடைக்காமலே இருந்தது. அப்போது, இதுபோன்ற சம்பவம் வேறு ஏதேனும் ரெயில்களில் நடைபெற்றுள்ளதா என்று ரயில்வே போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, நாக்பூர்- வர்தா ரயில் நிலையங்களுக்கு இடையே இதேபோன்று ஒரு கொள்ளை சம்பவம் நடைபெற்றதை கண்டுபிடித்தனர்.




உடனடியாக அந்த கொள்ளைச் சம்பவம் நடைபெற்றபோது ரயிலில் பணிபுரிந்த பயணிகளின் செல்போன்களை சேகரித்தனர். மேலும், நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொள்ளை நடைபெற்ற பயணிகளின் மொபைல் எண்ணையும் சேகரித்தனர். அப்போது, இரு கொள்ளைச் சம்பவங்களின்போதும் சிலருடைய செல்போன் எண்களும், அவர்களது மொபைல் சிக்னல்களும் ஒன்றாக இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது முகமது ஜாசிம் என்ற சுக்கு என்பதை கண்டுபிடித்தனர்.


இதையடுத்து, கடந்த மாதம் 21-ந் தேதி தனிப்படை போலீசார் நாக்பூர், மொனின்புரா பகுதியில் பதுங்கியிருந்த கொள்ளையன் முகமது ஜாசிமை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட முகமது குட்டு, முகமது இம்தியாஸ் ஆகியோர் அப்போது தப்பி ஓடிவிட்டனர்.


பின்னர், கைது செய்யப்பட்ட முகமது ஜாசிமை போலீசார் நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அங்கிருந்து சென்னை அழைத்து வந்தனர். சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் குற்றவாளியை ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் முகமது ஜாசிமை சிறையில் அடைத்தனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளையனை செல்போன் சிக்னல் மூலம் தனிப்படை  போலீசார் பிடித்ததற்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், தப்பியோடிய முகமது குட்டு, முகமது இம்தியாஸ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.