Crime: நொய்டாவில் பல்கலைக்கழக மாணவரை, அவரது நண்பர்கள் அடித்து கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பார்ட்டிக்கு சென்ற மாணவர்:


உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் படித்து வந்தவர் யாஷ் மிட்டல். இவர் பிப்ரவரி 26ஆம் தேதி அம்ரோஹாவ் என்ற பகுதியில் உள்ள வயல்வெளியில் நண்பர்கள் நடத்திய பார்ட்டிக்கு விடுதியில் இருந்து சென்றார். அங்கு, மாணவர் யாஷ் மிட்டலுக்கும், இவரது நண்பர்களுக்கும் மோதல் வெடித்தது.


இந்த மோதலில் யாஷ் மிட்டலில் நண்பர்களான ரச்சித், சிவம்,  சுசாந்த், ஷுபம் ஆகியோர் சேர்த்து சரமாரியாக தாக்கியுள்ளதாக தெரிகிறது. மேலும், யாஷ் மிட்டலை அடித்து கொலை செய்ததுடன், உடலை அங்கேயே புதைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். 


இதற்கிடையில், யாஷ் மிட்டலின் தந்தை தீபக் மிட்டலுக்கு மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு மிரட்டி வந்திருக்கின்றனர். அதாவது, யாஷ் மிட்டலை கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.6 கோடி பணம்  தர வேண்டும் என்று மிரட்டி வந்துள்ளனர்.  இதனால், தீப் மிட்டல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.


புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் பல்கலைக்கழகத்தின் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில், யாஷ் மிட்டல் விடுதியில் இருந்து செல்போன் பேசியபடி வெளியே சென்றது தெரிய வந்தது. 


அடித்தே கொன்ற நண்பர்கள்:


இதனையடுத்து, யாஷ் மிட்டல் செல்போனில் பேசிய கடைசி எண்ணை ஆய்வு செய்தபோது, அவரது நண்பர் ரச்சித் என்பது தெரியவந்தது. இதனால், போலீசார் ரச்சித்தை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் யாஷ் மிட்டலை கொலை செய்து வயல்வெளியில் புதைத்ததை ஒப்புக் கொண்டார். 


அத்துடன் உடலை புதைத்த இடத்தையும் அடையாளம் காடினார். உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கில் ரச்சித், சிவம், சுசாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஷுபம் என்ற மாணவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 


இதுகுறித்து போலீசார் கூறுகையில், "பிப்ரவரி 26ஆம் தேதி யாஷ் மிட்டல் பல்கலைக்கழக விடுதியில் இருந்து நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றிருக்கிறார். அங்கு நண்பர்களுக்கும், யாஷ் மிட்டலுக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. வாக்குவாதம் நீடித்த நிலையில், யாஷ் மிட்டலை அவரது நண்பர்கள் அடித்து கொலை செய்து வயல்வெளியில் புதைத்துள்ளனர். யாஷ் மிட்டலின் உடல் கஜ்ரௌலாவில் உள்ள விவசாய நிலத்தில் 6 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டது. நேற்று தான் இவரது உடலை மீட்டோம். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்றார்.