கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி நிறைவடைந்துள்ளது. இதனால் வரும் பொங்கல் பண்டிகைக்குள் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது.




கன்னியாகுமரி கடல் நடுவிலுள்ள ஒரு பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைந்துள்ளது. இதனருகே உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவள்ளுவர் சிலை சுத்தம் செய்யப்பட்டு ரசாயன கலவை பூசப்படுவது வழக்கம். திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட பிறகு ஐந்தாவது முறையாக ரசாயன கலவை பூசும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்த பணி சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சிலையைச் சுற்றி பெரிய இரும்பு பைப்புகள் மூலம் சாரங்கள் அமைக்கப்பட்டன. பின்னர் தண்ணீர் மூலம் சிலை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.




அதைத்தொடர்ந்து சிலையின் இணைப்புகளில் ஏற்பட்டுள்ள வெடிப்புகளை அடைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை சேர்ந்த கலவை வெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் பூசப்பட்டது. அடுத்தகட்டமாக சிலையில் படிந்துள்ள உப்பினை அகற்றும் விதமாக சிலை மீது காகித கூழ் ஒட்டும் பணிகள் தொடங்கியது. அந்த பணி தற்போது நிறைவடைந்துள்ளது. சிலையில் உள்ள உப்புகள் முழுவதும் நீக்கப்பட்டு அதனை தொடர்ந்து ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்கர் எனபடும் ரசாயனம் திருவள்ளுவர் சிலை முழுவதும் பூசப்பட்டது.




நவம்பர் மாதம் பணி முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தொடர் மழை மற்றும் சூறைக்காற்றால் பணி தாமதமானது. தற்போது 145 அடி உயரத்துக்கு அமைக்கப்பட்டு இருந்த சாரத்தை பிரிக்கும் பணி நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக, திருவள்ளுவர் சிலையைப் பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.