மயிலாடுதுறையில் கடந்த பிப்ரவரி 21-ந் தேதி காரில் சென்று கொண்டிருந்த சாதிக் பாட்ஷா போலீசாரை துப்பாக்கியால் காட்டி மிரட்டியதை அடுத்து கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். போலீசார் விசாரணையில் சாதிக் பாட்ஷா சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததைத கண்டறிந்தனர். பின்னர், இந்த வழக்கு என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.


தேசிய புலனாய்வு முகமை கடந்த ஜூன் மாதம் சென்னை, மயிலாடுதுறை உள்பட சாதிக் பாட்ஷாவிற்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்களை தேசிய புலனாய்வு முகமை கைப்பற்றினர். இந்த நிலையில், இந்த சாதிக் பாட்ஷாவிற்கு தீவிரவாத அமைப்பான அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.




மயிலாடுதுறையில் கடந்த 21-ந் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாரை மிரட்டிய 5 பேரில் 4 பேர் சாதிக் பாட்ஷா, ஆஷிக், முகமது இர்பான் மற்றும் ரஹமதுல்லா ஆகியோர் மீது  தேசிய புலனாய்வு முகமை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


முன்னதாக, மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்ட இவர்கள் 4 பேர் உள்பட மற்றொரு நபர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தேசிய புலனாய்வு முகமை விசாரணையில், சாதிக் பாட்ஷா பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மயிலாடுதுறை காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.




தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள் சாதிக் பாட்ஷா மீது அவர் நடத்தி வரும் தற்காப்பு கலை பயிற்சி நிறுவனத்திற்கு வரும் இளைஞர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்வதற்கு உதவியதாக குற்றச்சாட்டும் உள்ளது. 2017ம் ஆண்டு சாதிக் பாட்ஷாவை சென்னை வடக்கு கடற்கரை போலீசார் ஆயுத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


உளவுத்துறையால் தீவிரமாக கண்காணிக்கப்படும் 72 பேர் பட்டியலில் சாதிக்பாட்ஷாவும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாதிக் பாட்ஷா மீது சென்னை பெரியமேடு, ஆயிரம் விளக்கு, வடக்கு கடற்கரை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : யார் இந்த சாதிக் பாஷா? என்ஐஏ சோதனையின் பின்னணி!


மேலும் படிக்க : ஏ.கே. 47 துப்பாக்கிகளுடன் கரை ஒதுங்கிய மர்மபடகு..! சதிவேலைக்கு பயங்கரவாதிகள் திட்டமா? மக்கள் பீதி..!