தெலங்கானாவில் திருமணமான மறுநாளே மணப்பெண் குழந்தைப் பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


திருமணம் என்பது ஒவ்வொருவரின் ஆசைகளும்,கனவுகளும் நிறைந்த ஒன்றாக இருக்கும். விமரிசையாக, எளிமையாக, எதிர்பாராத திருமணங்கள் என அந்த நிகழ்வு ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்க முடியாத தருணங்களாக அமைந்து விடும். அதேசமயம் சில திருமணங்கள் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்றாக அமைந்து விடும். நடக்கும் குற்றங்கள் மணமகன், மணப்பெண் இருவரின் வாழ்க்கையையும் பாதிக்கும் என்பது பலருக்கும் புரியாத ஒன்றாகவே உள்ளது. அப்படி ஒரு அதிர்ச்சியான சம்பவம் தெலங்கானாவில் நடைபெற்றுள்ளது. 


அங்குள்ள அசெகந்திராபாத் நகரை சேர்ந்த பெண்ணுக்கும், கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த இளைஞருக்கும் கடந்த ஜூன் 26 ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. விமரிசையாக நடந்த திருமணம் முடிந்து தம்பதியினர் இருவரும் இல்லற வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். முதலிரவு அறையில் மணப்பெண் திடீரென தனக்கு வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதனால் உடனடியாக கணவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அப்பெண் 7 மாத கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவிக்க, கணவர் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


இதனைத் தொடர்ந்து மறுநாள்  அப்பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த பிரச்சினை பூதாகரமாக வெடிக்க, கணவர் வீட்டார் பெண் வீட்டாரிடம் நியாயம் கேட்டதாக கூறப்படுகிறது. பெண் முன்பே கர்ப்பமானது தெரிந்து தங்களை ஏமாற்றி கல்யாணத்தை நடத்தியதாக கணவர் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.  மேலும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட சமயத்தில் பெண்ணின் வயிறு பெரிதாக இருந்துள்ளது. இதுபற்றி கேட்டபோது, பெண் குடும்பத்தினர், அவருக்கு சமீபத்தில் தான் கல் நீக்க அறுவை சிகிச்சை நடந்ததாகவும், அதனால் வயிறு பெருத்து காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். 


ஆனால் மருத்துவரிடம் அழைத்துச் சென்ற போது உண்மை தெரிய வந்துள்ளது. இப்படியான நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இரு குடும்பத்தினரும் போலீசில் புகாரளிக்கவில்லை. ஆனால் பெண் மற்றும் குழந்தையை ஏற்க கணவர் வீட்டார் மறுத்து விட்டனர். இதனைத் தொடர்ந்து செகந்தரபாத்தில் இருந்து வந்த பெண் குடும்பத்தினர் இருவரையும் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டனர். திருமணம் முடிந்த அடுத்த நாளே மணமகள் குழந்தை பெற்றது தெலங்கானாவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.