நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மைலாப்புதூர் மேலூரைச் சேர்ந்தவர் சுடலைக்கண்ணு என்ற மகாராஜன் (40). இவர் மதுரையில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் ஈஸ்வரி (34) என்பவரை காதலித்து திருமணம் செய்து உள்ளார். இவர்களுக்கு 3 குழந்தைகளும் உள்ளது. இந்த நிலையில் மதுரையில் இருந்து சொந்த ஊரான நெல்லைக்கு கடந்த சில நாட்களுக்கு முன் குடும்பத்துடன் வந்துள்ளார். பின்னர் நாங்குநேரி அருகே துலுக்கர்பட்டியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 16 ஆம் தேதி கணவன் மனைவி இருவரும் அருகேயுள்ள நம்பியாற்றிற்கு சென்றுள்ளனர். அதன்பின்னர் இருவரும் வீடு திரும்பவில்லை.
குறிப்பாக நேற்று முன் தினம் நம்பியாற்றில் பெண் சடலம் ஒன்று மிதப்பதை பார்த்த ஒரு சிலர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அது காணாமல் போன ஈஸ்வரி என்பது தெரியவந்தது. அவரது கழுத்து பகுதியில் காயங்கள் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் ஈஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அதே போல ஈஸ்வரியின் கணவர் சுடலைக்கண்ணு மாயமான நிலையில் அவர் மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருக்கிறாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதே போல ஈஸ்வரியின் பிரேத பரிசோதனை அறிக்கையின் படியே அவர் கொலை செய்யப்பட்டாரா இல்லையா என்பது தெரிய வரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஈஸ்வரியின் கணவர் சுடலைக்கண்ணுவையும் காவல்துறையினர் தேடி வந்தனர்.
அப்போது சுடலைக்கண்ணு தலைமறைவாக இருப்பது தெரியவந்த நிலையில் அவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மனைவியின் நடத்தை மீது சந்தேகமடைந்த சுடலைக்கண்ணு இது போன்ற செயலில் ஈடுபட்டதாக தெரிய வந்தது. குறிப்பாக ஈஸ்வரியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகத்தால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இதில் ஆத்திரமடைந்த சுடலைக்கண்ணு மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி நம்பியாற்றிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில் ஈஸ்வரியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு உடலை ஆற்றினுள் வீசிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சுடலைக்கண்ணுவை காவல்துறையினர் கைது செய்தனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்