நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சியை சேர்ந்தவர் கணேச கண்ணன் (35). இவரது வங்கி கணக்கில் இருந்து மர்ம நபரால் பணம் திருடப்படுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக 18.07.2022-ம் தேதி திருநெல்வேலி மாவட்ட சைபர்கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன், வங்கி கணக்கிலிருந்து பணத்தை திருடிய நபரை விரைந்து கைது செய்யும்படி சைபர் கிரைம் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ராஜூவிற்கு அறிவுறுத்தியதன் பேரில் காவல் ஆய்வாளர் ராஜ், உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கணேச கண்ணன் என்பவரும், அயன் சிங்கம்பட்டியை சேர்ந்த சரவணன்(32), என்பவரும் நண்பராக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் சரவணன், கணேச கண்ணன் என்பவரின் ஏர்டெல் நம்பரில் அவரது வங்கி கணக்கு விபரங்கள் இருப்பதை அறிந்துள்ளார். சரவணன் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருவதால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் சரவணன், கணேச கண்ணனிடம் ரூ.10 லட்சம் வங்கியில் கடன் பெற்று தரும்படி கேட்டுள்ளார். கணேச கண்ணன் கடன் பெற்று தர மறுத்துள்ளார். இந்நிலையில், சரவணன் எனது எண்ணுக்கு Recharge செய்து தரும்படி கணேச கண்ணனிடம் கேட்டுள்ளார், கணேசகண்ணன், சரவணனிடம் தனது செல்லை கொடுத்து Recharge செய்யும்படி கூறியுள்ளார்.
இச்சூழலை பயன்படுத்திக்கொண்ட சரவணன் அவரது வங்கி சேமிப்பு விபரங்கள், வங்கி எண் ஆகியவற்றை அறிந்து கொண்டார். பின் கணேசகண்ணனின் செல் நம்பரை செயலிழக்க செய்து அதே எண்ணை சரவணன் அவர் பெயரில் மாற்றம் செய்து பயன்படுத்தி வங்கி கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்தை GPay மூலம் சரவணன் கடன் பெற்றவர்களுக்கு அனுப்பியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் சைபர் கிரைம் காவல்துறையினர் சரவணனை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருவதோடு அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் பணத்தை மீட்டு கணேச கண்ணனிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய சைபர் கிரைம் காவல்துறையினர், பொதுமக்கள் தங்கள் வங்கி விபரங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும், ATM Pin, Gpay, Phone pay, போன்ற செயலிகளின் Pin எண்களை ரகசியமாக வைத்து கொள்ள வேண்டும், யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்