நெல்லை மாவட்டம் சீவலப்பேரி கோனார் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி(38). கால்நடை விவசாயியான மாயாண்டி நேற்று இரவு வழக்கம் போல் சீவலப்பேரி - கலியாவூர் சாலையில் மாடு மேய்த்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம கும்பல் மாயாண்டியை சுற்றி வளைத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. அப்போது இரத்த  வெள்ளத்தில் சரிந்து விழுந்த மாயாண்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து உடனடியாக சீவலப்பேரி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சீவலப்பேரி காவல்துறையினர், நெல்லை மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து மாயாண்டியின் உடலை மீட்ட அவர்கள் பிரேத பரிசோதனைக்காக உடலை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.




தொடர்ந்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டதோடு இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து பலரிடம் விசாரணை நடத்தினர். அப்போது முதல்கட்ட விசாரணையில், இதே பகுதியில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட கோயில் பூசாரியான சிதம்பரம் என்பவரின் உறவினர் தான் மாயாண்டி என்பது தெரியவந்துள்ளது. அதாவது சீவலப்பேரியில் உள்ள புகழ்பெற்ற கோயிலில் கடைகள் கட்டி வாடகைக்கு விடுவது தொடர்பாக இரு வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் கோயில் பூசாரி சிதம்பரம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சீவலப்பேரியில் இரு சமூகத்தைச் சேர்ந்த தரப்பினர் மோதிக்கொண்டதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது. பூசாரியின் கொலைக்கு நீதி கேட்டு தொடர் போராட்டங்களும் நடைபெற்ற நிலையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.




இந்த நிலையில் பூசாரி சிதம்பரத்தின் கொலை வழக்கில் மாயாண்டி என்பவர் அதிக ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது. குறிப்பாக சாட்சிகளை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்வது அவர்களுடன் நெருங்கி பழகுவது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார். எனவே கோயில் பூசாரியை கொலை செய்த கும்பல் தான் தற்போது மாயாண்டியையும் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.


இருப்பினும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். ஏற்கனவே கோயில் பூசாரி கொலை சம்பவத்தை தொடர்ந்து சீவலப்பேரியில் பதட்டமான சூழல் இருந்து வரும் நிலையில் தற்போது பூசாரி தரப்பில் மற்றொருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது. இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 


இந்த சூழலில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரியும், உயிரிழந்த மாயாண்டியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கக்கோரியும் அக்கிராம மக்கள் மற்றும் மாயாண்டியின் உறவினர்கள் இன்று நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவிருக்கும் சூழலில் ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண