தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி கிராமம் வஉசி நகரை  சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகள்  குமுதா(23),  ஆவுடையானூர் அருகே உள்ள ராயப்பநாடானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகன் சுதர்சன் (29), இவர் சென்னையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். சுதர்சனுக்கும், குமுதாவிற்கும்  கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக பெரியோர்களின் முன்னிலையில் நிச்சயிக்கப்பட்டு திருமணமும் நடைபெற்றதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் சுதர்சன் திருமணமாகி 25 நாட்கள் மட்டுமே குமுதாவுடன் குடும்பம் நடத்திவிட்டு சென்னைக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு சென்று வீடு பார்த்துவிட்டு பின்பு வந்து அழைத்துச் செல்வதாக கூறி குமுதாவை அவரது தாய் வீட்டில் விட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் குமுதா தொலைபேசி வாயிலாக அழைத்த பொழுது அதனை சுதர்சன்  நிராகரித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சுதர்சன் குமுதாவிடம் உன்னை எனக்கு பிடிக்கவில்லை நான் வேறு ஒரு பெண்ணை விரும்புகிறேன் எனவும் கூறியதாக கூறப்படுகிறது.


இதனால் அதிர்ச்சி அடைந்த குமுதாவின் குடும்பத்தினர் சுதர்சனின் குடும்பத்தினரிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் சுதர்சனின் பேச்சைக் கேட்டே இருந்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் தொலைபேசியில் குமுதா சுதர்சனை அழைக்கும் பொழுதெல்லாம் கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும்  இதனால் குமுதா மன வேதனையில் இருந்ததாகவும் தெரிகிறது. இதே நேரம் சுதர்சன் தனது சொந்த ஊருக்கு வந்திருப்பதாக அறிந்த குமுதா தனது உறவினர்களுடன் சேர்ந்து நேற்று இரவு சுதர்சனின் வீட்டு வாயிலில் தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தர்ணாவில் இருந்த குமுதாவிடம் பலரும் பேச்சுவார்த்தை நடத்தினர். குமுதா தர்ணாவில்   இருந்ததை அறிந்து சுதர்சன் மற்றும் அவரது பெற்றோர் சுதாரித்துக் கொண்டு வீட்டிற்கு வராமல் வீட்டை பூட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. மேலும் தகவலறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததோடு எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.




இந்த நிலையில் இரவு நீண்ட நேரமாகியும் சுதர்சன் வீட்டை திறக்காததால் குமுதா தனது தாய் வீட்டிற்கு இரவில் சென்றுள்ளார். அப்போது இன்று அதிகாலையில் சுதர்சன் மற்றொரு செல்போன் நம்பரில் இருந்து குமுதாவை அழைத்து கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த குமுதா காலை 8 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. மகள் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த குடும்பத்தினர்  கதறி அழுதது காண்போரை கண் கலங்க  செய்தது.


தகவல்  அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாவூர்சத்திரம் போலீசார்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குமுதா மீது ஏற்கனவே சுதர்சன் போலீசில் புகார் அளித்திருந்ததாகவும்,  அதில் குமுதாவிற்கு மனநிலை சரியில்லை என்றும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பதிலுக்கு குமுதா உறவினர்களும் சுதர்சன் மீது ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  திருமணம் செய்து விட்டு அவருடன் வாழாமல் ஒரு மாதத்திற்குள்ளாகவே அவரது உறவை முறித்ததால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காவல்துறையில் பணிபுரிந்து கொண்டு காவலர் ஒருவரே தான் திருமணம் முடித்த பெண்ணை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Suicidal Trigger Warning..


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)