கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே நெய்யூர் திங்கள் சந்தையை சேர்ந்தவர் ஜூலியஸ் குமார் (42). இவர் நெல்லை மாவட்டம் மேலத் திடீயூரில் உள்ள பிஎஸ்என் கல்லூரியில் தங்கி இருந்தபடி கட்டிடப் பணியில் ஈடுபட்டு வருகிறார். கல்லூரி வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்தில் தங்கி வேலை பார்க்கும் இவர் நேற்று தன்னுடன் பணியாற்றும் சக தொழிலாளர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் சக தொழிலாளர்களால் ஜூலியஸ் குமார் கை கால் முகம் கழுத்து என உடல் முழுவதும் சரமாரியாக வெட்டப்பட்டு நேற்று கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்ட கல்லூரி நிர்வாகத்தினர் முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை நடந்த இடத்தில் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களும் சேகரிக்கப்பட்டது. தொடர்ந்து இக்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். அதோடு முதல் கட்ட விசாரணையில், ஜூலியஸ் குமார் மற்றும் அவருடன் பணி புரிந்த இரண்டு தொழிலாளர்கள் என மூன்று பேர் சேர்ந்து தீபாவளி பண்டிகையக முன்னிட்டு மது விருந்து ஏற்பாடு செய்து மூன்று அளவுக்கு அதிகமாக மது அருந்தி குடித்துக் கொண்டிருந்த போது இந்த கொலை சம்பவம் நடந்தது தெரியவந்தது. அதோடு அவருடன் மது அருந்திய 2 தொழிலாளர்களும் நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த குமரி மாவட்டம் சாமியார்மடத்தை சேர்ந்த சூர்யா (24) மற்றும் திங்கள் சந்தை சானல்கரையை சேர்ந்த செல்வன் (33 ) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து கைது செய்தவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தீபாவளி அன்று இரவு அனைவரும் ஒன்று சேர்ந்து மது அருந்தியதாகவும், அப்போது தகராறு ஏற்பட்டதில் வாக்குவாதம் முற்றவே இருவரும் சேர்ந்து ஜூலியஸ் குமாரை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக தெரிவித்துள்ளனர். மது விருந்தின் போது போதையில் தன்னுடன் பணிபுரிந்த சக தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.