நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் டேனியல் சேகர். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷகிலா. இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இதனால் ஷகிலா தனது மகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். இச்சூழலில் நேற்று இரவு இருவரும் வீட்டை பூட்டி விட்டு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இன்று அதிகாலையில் முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து ஷகிலாவிடம் அரிவாளை காட்டி மிரட்டி தங்க செயின், தங்க வளையல் என வீட்டில் இருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து ஷகிலா பணகுடி போலீசில் புகார்  அளித்தார். அப்புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு விசாரணையானது நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், ஷகிலாவின் கணவர் கடந்த 20 ஆம் தேதி தான் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் ஆண்கள் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் அதனை நோட்டமிட்டு வீட்டினுள் புகுந்து உள்ளனர். மேலும் வீட்டை சுற்றி சிசிடிவி கேமராக்களும் உள்ளது. ஆனால் அக்கேமராக்களின் திசையை வேறு பக்கமாக திருப்பி வைத்து விட்டு இரண்டு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் உள்ளே புகுந்துள்ளனர். அதுமட்டுமின்றி வீட்டு வாசலில் கோழியின் தலையை அறுத்து போட்டு விட்டு அதில் இருந்த இரத்தத்தை அரிவாளில் தடவி விட்டு வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். மேலும் இருவரின் செல்போன்களையும் பறித்து சென்று வீட்டின் மாடியில் போட்டு விட்டு சென்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாசலில் கோழியை அறுத்து அதன் தலையுடன் இரத்தத்தை இட்டு சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.  காவல்துறையின் விசாரணையில் தங்க கம்மல், தங்க செயின், வளையல் என 32 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.


நேற்று அதிகாலையும் தான் இதே போன்று வடக்கன் குளம் அருகே வீட்டில் தனியாக இருந்த 62 வயது பெண்ணை கொன்று அவரது கழுத்தில் இருந்த 9 சவரன் தங்க செயின், கையில் இருந்த 2 சவரன் வளையல் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றதும் இச்செயலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை கைது செய்ததுடன் மேலும் சிலரை தேடி வருகின்றனர். தொடர்ச்சியாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறி வைத்து இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் சூழலில் வடக்கன் குளம் பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும் இரவு நேர ரோந்து பணியில் கூடுதல் காவலர்களை நியமித்து குற்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.  வீட்டு வாசலில் இரத்தத்தை விட்டு அரிவாளில் இரத்தத்தை காட்டி வீட்டினுள் புகுந்து 32 சவரன் நகைகளை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர



யூடியூபில் வீடியோக்களை காண