நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர் டேனியல் சேகர். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷகிலா. இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். ஷகிலா அவரது மகளுடன் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி இரவு இருவரும் வீட்டை பூட்டி விட்டு தூங்கியுள்ளனர். மறுநாள் அதிகாலையில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து ஷகிலாவிடம் அரிவாளை காட்டி மிரட்டி தங்க செயின், தங்க வளையல் என வீட்டில் இருந்த 32 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து ஷகிலா அளித்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து முகமூடி கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் ஆசிரியை ஷகிலா வீட்டில் சிசிடிவி கேமராக்கள் இருந்தும் மர்ம நபர்கள் உள்ளே வந்து கொள்ளையடித்து சென்றதும் குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்த விசாரணையில், ஆசிரியை ஷகிலா வீட்டில் துணையின்றி வசித்து வந்ததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டினுள் புகுந்து, சிசிடிவி கேமராக்களின் திசையை மாற்றி கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் காவல்கிணறு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வாலிபர் ஒருவர் சுற்றி வந்துள்ளார். அந்த வாலிபரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சிங்கநேரியைச் சேர்ந்த சங்கரசுப்பு (23) என்பதும், வடக்கன்குளம் ஆசிரியை ஷகிலாவை அரிவாள் காட்டி நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர்களில் ஒருவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து ஏற்கனவே பாளை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மர்ம நபர்களை மேலும் தீவிரமாக தேடி வந்த நிலையில், சங்கரசுப்பு கொடுத்த தகவலின் பேரில் தூத்துக்குடி மாவட்டம் பன்னம்பாறை வடக்கு தெருவைச் சேர்ந்த மாடசாமி மகன் சூர்யா (22) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து உள்ளனர். தொடர்ந்து அவரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். ஏற்கனவே இச்சம்பவம் தொடர்பாக முத்துராமன், ராஜதுரை, நயினார் ஆகியோரை பழநி போலீசார் கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஒருவரையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்