நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை - தூத்துக்குடி சாலையில் நெல்லை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நாள்தோறும் பெண்கள் தொடர்பான பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவில்பட்டியை சேர்ந்த மத போதகரான ஜோஸ்வா என்பவரை வழக்கு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்காக காவலர்கள் அவரை மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வந்திருந்தனர். பின் நீதிமன்ற அறைக்குள் நீதிபதி முன் விசாரணையானது நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மர்மநபர் ஒருவர் கையில் அரிவாளுடன் ஜோஸ்வாவை நோக்கி வெட்டப் பாய்ந்து சென்றார்.




மற்றொரு வழக்கில் கைதியை அழைத்து வந்த காவலர் வேணுகோபால் துரிதமாக செயல்பட்டு அரிவாளுடன் வந்த நபரை துப்பாக்கி முனையில் மடக்கினார். பின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற போலீசார் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அரிவாளுடன் வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. குறிப்பாக நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே பாப்பாங்குளம் பகுதியைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. அதாவது போலி மதப்போதகரான ஜோஸ்வா ஊர் ஊராக சென்று மத பிரச்சாரம் செய்து வந்துள்ளார். அப்போது பல  இளம் பெண்களை ஏமாற்றி தனது காதல் வலையில் சிக்க வைத்துள்ளார். அந்த வகையில் நவநீதகிருஷ்ணனின் தங்கை மற்றும் நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண் இருவரையும் ஜோஸ்வா ஒரே நேரத்தில் காதலித்ததுடன் இருவரையும் பல்வேறு இடங்களுக்கு வெளியே அழைத்துச் சென்று நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஜோஸ்வா, நவநீதகிருஷ்ணன் தங்கையை ஏமாற்றிவிட்டு தாழையூத்தை சேர்ந்த பெண்ணுடன் நெருங்கி பழகியுள்ளார். இதனால் மனமுடைந்த நவநீதகிருஷ்ணனின் தங்கை கடந்த 2017ம் ஆண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவநீதருஷ்ணன், தனது தங்கை மரணத்துக்கு காரணமான போலி மதப்போதகர் ஜோஸ்வா மற்றும் தாழையூத்தை சேர்ந்த பெண் இருவரையும் கொலைவெறியுடன் தேடியுள்ளார்.




ஜோஸ்வா தலைமறைவானதால் தாழையூத்து பெண்ணை கொலை செய்ய அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணின் தாய் மட்டுமே இருந்ததால் அவரை வெட்டி கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தபிறகும் தனது தங்கை வாழ்க்கையை சீரழித்த ஜோஸ்வாவை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்துள்ளார். இந்த நிலையில் தான் பாலியல் வழக்கு ஒன்றில் போலி மதப்போதகர் ஜோஸ்வா நெல்லை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதை அறிந்த நவநீதகிருஷ்ணன் நீதிமன்றத்திற்குள் வைத்தே ஜோஸ்வாவை வெட்டி கொலை செய்யும் எண்ணத்துடன் கையில் அரிவாளுடன் நீதிமன்ற அறைக்குள்ளையே தைரியமாக சென்றது விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் காவலர் வேணுகோபால் மிகத் துரிதமாக செயல்பட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கி முனையில் நவநீதகிருஷ்ணனை சரண்டர் செய்ததால் நீதிபதி கண் முன்பு நடக்க இருந்த கொலை சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது. நெல்லையில் நீதிமன்ற அறைக்குள் நீதிபதி கண் முன்னே கையில் அரிவாளுடன் கொலை செய்ய வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண