நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே அம்பேக்தர் காலனியை சேர்ந்தவர் அரிச்செல்வம். இவரது மகன் மகாராஜன் (18), இவரது நண்பர்கள் முக்கூடலை சேர்ந்த பிரேம்குமார் என்ற பிரின்ஸ் (22), முத்தரசன். இவர்களில் பிரின்ஸ் மற்றும் முத்தரசன் ஆகிய இருவரும் நேற்று முக்கூடலில் இருந்து சேரன்மகாதேவி விலக்கு வரை தனித்தனியாக அதிவேக திறன் கொண்ட இரண்டு இருசக்கர வாகனங்களில் ரேஸ் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பிரின்ஸ் சென்ற இருசக்கர வாகனத்தில் பின்னால் மகாராஜன் அமர்ந்துள்ளார்.
விபத்தில் இளைஞர் உயிரிழப்பு:
தொடர்ந்து மூவரும் சேரன்மகாதேவி விலக்கு வரை சென்றுவிட்டு மீண்டும் முக்கூடல் நோக்கி அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முக்கூடல் அருகேயுள்ள பொட்டல்காலனி பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் பிரின்ஸ் வந்த வாகனம் மோதியுள்ளது. அதோடு எதிரே இருசக்கர வாகனத்தில் வந்தவர்களின் பின்னால் வந்த பைக்கும் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அவர்களது பின்னால் வந்த ஒருவர் என அனைவரும் விபத்தில் சிக்கினர். அப்போது பிரின்ஸ் பின்னால் அமர்ந்து வந்த மகாராஜன் தூக்கி வீசப்பட்டதில் அவர் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மற்ற நால்வருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்த முக்கூடல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதோடு உயிரிழந்த மகாராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த களக்காடு பகுதியை சேர்ந்த சதக்கத்துல்லா (42) மற்றும் பொன்ராஜ் (42) மற்றும் அவர்களது பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கிய முத்தரசன் மற்றும் விபத்தை ஏற்படுத்திய பிரின்ஸ் ஆகிய நான்கு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பைக் ரேஸ்:
தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தியதோடு இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அதிவேக திறன் கொண்ட இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பைக் ரேஸில் தான் ஈடுபட்டனரா? என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அதி வேகத்தில் வந்து விபத்தை ஏற்படுத்தியதில் ஒருவர் உயிரிழந்ததோடு 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடும் சம்பவம் குறித்த செய்திகள் வெளியாகும் சூழலில் நகர்ப்புறங்களை தாண்டி கிராமப்புற மாணவர்களும் இது போன்ற செயலில் ஈடுபடுவது என்பது கண்டிக்கத்தக்க செயலாகும். இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க உரிய விசாரணை நடத்தி இது போன்ற பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்