நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே புது மனைத் தெருவைச் சேர்ந்த அசனார் என்பவரது மகன் மைதீன் பிச்சை (55), இவர் வீரவநல்லூர் அருகே மெயின் பஜாரில் நகைக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்த சூழலில் நேற்றும் வியாபாராத்தை முடித்து விட்டு இரவில் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு, நகைப்பையுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே தெருவில் சென்ற போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் மைதீன் பிச்சையை அரிவாளால் வெட்டிவிட்டு நகையை பறித்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இரத்த வெள்ளத்தில் வெட்டு காயங்களுடன் இருந்த மைதீன் பிச்சையை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொள்ளையர்கள் 5 கிலோ வரை நகைகளை கொள்ளையடித்து சென்றதாகவும், அதன் மதிப்பு பல லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சூழலில் காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர், குறிப்பாக நகைகளை பறித்துச் சென்றவர்கள் குறித்த தகவல்களை அப்பகுதியில் சுற்றியுள்ள சி.சி.டி.வி கேமரா காட்சி மூலம் ஆய்வு செய்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து மாவட்ட எஸ்.பி சரவணன், சேரன்மாதேவி டி.எஸ்.பி ராமகிருஷ்ணன், வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதோடு விரைவில் கொள்ளையர்களை பிடிப்போம் என்று தெரிவித்தனர்.
வீரவ நல்லூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடந்த 4 வருடத்திற்கு முன்பு 2 லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்து 18 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி உள்ளனர். ஆனால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த சிசிடிவி கேமராக்கள் பழுது காரணமாக இயங்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் மற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, நகைக்கடை உரிமையாளரை தாக்கி சுமார் 5 கிலோ வரை தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்