நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ளது மாறன்குளம். இப்பகுதியை சேர்ந்தவர் சமுத்திரபாண்டி (வயது 63). இவர் கப்பலில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். ஒரு மகன் உள்ளூரிலும் மற்றொரு மகன் பெங்களூரிலும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி சமுத்திரபாண்டி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் பெங்களூருவில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்டு வீடு பூட்டியிருப்பதை அறிந்த மர்ம நபர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்து கதவை உடைத்து உள்ளே சென்று வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்துள்ளனர். பின்னர் அதிலிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்ததோடு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.




கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து பழவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் திருட்டு குறித்து பார்வையிட்டனர்.  மேலும் கொள்ளை நடந்த வீட்டிற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.  தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களும் சேகரிக்கப்பட்டது. கொள்ளை குறித்து தொலைபேசி மூலம் வீட்டு உரிமையாளரான சமுத்திரபாண்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கொள்ளை போன பொருட்கள் குறித்த விவரங்கள் கேட்டறியப்பட்டது. அப்போது வீட்டில் பீரோவில் பூட்டி வைக்கப்பட்டிருந்த 45 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.




இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதோடு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட  இருசக்கர வாகனம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், கொள்ளையர்கள் கொள்ளையடிக்க பயன்படுத்திய இரும்பு கம்பிகள் மற்றும் கையுறைகள் கிடந்ததும் கண்டறியப்பட்டது. இதனை வைத்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதோடு அப்பகுதியை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர். கப்பல் அதிகாரி வீட்டில் 45 சவரன் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண