சென்னை கொளத்தூர் ராஜன் நகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் பட்டரவாக்கத்தில் இரும்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் நடத்தி வருகிறார். மேலும், அப்பகுதியில் வாடகை வீட்டில் தனது மகள் சங்கீதா, பேத்தி ஹர்ஷிதா ஆகியோருடன் வசித்து வருகிறார்.



 

ஜன்னல் வழியாக கம்பி

 

இந்நிலையில் நேற்று அனைவரும் சாப்பிட்டு விட்டு வீட்டை உள் பக்கம் பூட்டி விட்டு சாவியை கதவின் அருகே மாட்டிவிட்டு வேறு ஒரு அறையில் தூங்கச் சென்றனர். அப்போது இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கதவின் பக்கத்தில் உள்ள ஜன்னல் வழியாக கம்பியை விட்டு, சாவியை எடுத்து கதவை திறந்து பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளார்.



 

பின்னர், காலையில் எழுந்து ராமச்சந்திரன் பார்க்கும்போது பீரோவில் இருந்த நகைகள் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் ராமச்சந்திரன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர் .

 

சிசிடிவி கேமரா

 

இந்நிலையில் சிசிடிவி கேமரா பதிவில் அடிப்படையில் ராஜமங்கலம் மக்காரம் தோட்டம் பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்ற இளைரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது உண்மை என தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து திருடு போன 20 சவரன் நகைகளையும் ராஜமங்கலம் போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புகார் அளித்த ஒரு நாட்களுக்குள் விசாரணை மேற்கொண்டு காவல்துறையினர் குற்றவாளி கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.



 

இது குறித்து காவல்துறையிடம் தொடர்பு கொண்டு கேட்டபொழுது , சென்னை, கொளத்தூர் ராஜன் நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார்.இவரின் மனைவி சங்கீதா, இரவு வீட்டின் கதவை பூட்டிவிட்டு மறுநாள் காலையில் கண்விழித்தபோது, வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த வளையல், செயின், மோதிம் உட்பட 20 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இது குறித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் சங்கீதா புகாரளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு உடனடியாக சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தோம் என தெரிவித்தனர்.