காதலே நிம்மதி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றில் வரிகளுக்கு இதுதான் அர்த்தம் என்பதை நிகழ்ச்சி ஒன்றில் பிரபல இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார். 


தமிழ் சினிமாவில் 90களின் இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் தேவா. தேனிசை தென்றல் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் தேவாவின் பாடல்கள் இன்றளவும் பலரின் பேவரைட் ஆக உள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் கானா பாடல்களை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமையும் தேவாவையே சாரும். ரஜினி,கமல், விஜய், அஜித், தனுஷ் என அத்தனை முன்னணி நடிகர்களுக்கும் இவர் இசையமைத்துள்ளார். 






இதனிடையே 1998 ஆம் ஆண்டு இந்திரன் இயக்கத்தில் முரளி, சூர்யா, ஜீவிதா, சங்கீதா, நாசர், மணிவண்ணன் ஆகியோர்  நடித்த காதலே நிம்மதி படம் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு தேவா தான் இசையமைத்திருந்தார். இப்படி ஒரு படம் வந்ததா என கேட்கும் ரசிகர்களுக்கு இதில் இடம் பெற்ற பாடல் ஒன்றை சொன்னால் சட்டென்று நினைவுக்கு வரும்.  அதன்படி பொன்னியின் செல்வன் என்பவர் எழுதிய விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி பாடலை இப்படத்தில் இடம்பெற்றது. 


பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்த இந்த பாடலை தேவா பாடியிருந்தார். பல மேடைகளில் அவர் இப்பாடலை தவறாமல் பாடுவார். இந்நிலையில் இந்த பாடலில் “டாவு டாவு டாவுடா...டாவு இல்லாட்டி டையிடா” என்ற வரிகள் இடம் பெற்றிருக்கும். இதற்கு நாம் அனைவருமே இத்தனை நாட்களாக காதல் இல்லையென்றால் சாதல் என பொருள் என நினைத்திருப்போம். அதுதான் இல்லை. 






சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேவா, இந்த வரிகளுக்கான அர்த்தத்தை விளக்கியிருந்தார். அந்த வகையில் காதல் இல்லை என்றால் காலம் முழுக்க கல்யாணம் செய்யாமல் தனிமையில் வாழ்வதே இதன் அர்த்தமாம். டையிடா என்ற வார்த்தை நரைமுடிக்கு அடிக்க பயன்படும் ஹேர்டையை குறிக்கும் என தெரிவித்திருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இத்தனை நாளா அர்த்தம் புரியாமலேயே பாடியிருக்கிறோமே என கருத்து தெரிவித்துள்ளனர்.