நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கடம்போடுவாழ்வு மங்கம்மாள் சாலையில் பிரபல ரவுடி நீராவி முருகனை திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீசார் ஒரு கொள்ளை வழக்கு தொடர்பாக நேற்று பிடிக்கச் சென்றபோது அவர் உதவி ஆய்வாளர் மற்றும் 3 காவலர்களை ஆயுதங்களால் தாக்கியதில் படுகாயம் அடைந்தனர், இதைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா தனது துப்பாக்கியால் நீராவி முருகனை சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே நீராவி முருகன் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து படுகாயமடைந்த நான்கு காவலர்களும், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.




மேலும் நீராவி முருகனின் உடலும் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது,  இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் இந்த வழக்கில் நாங்குநேரி மாஜிஸ்திரேட் ராம் கிஷோர் இன்று நீராவி முருகன் உடலை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார், மேலும் நீராவி முருகனின் சகோதரி செல்ல மாரியம்மாள் அவரது கணவர் ஆறுமுகம் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டார்,  இதைத்தொடர்ந்து நீராவி முருகனின் உடல் ஸ்கேன் செய்யப்பட்டு அதன் பிறகு பிரேதப் பரிசோதனை நடைபெற உள்ளது,




நீராவி முருகன் உடல் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது, இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா மற்றும் மூன்று காவலரிடம் விசாரணை நடத்த உள்ளார், இந்த சம்பவம் எப்படி நடந்தது எதற்காக துப்பாக்கியால் நீராவி முருகனை சுட்டார்கள் எனவும் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் உதவி ஆய்வாளர்  நீராவி முருகனை துப்பாக்கியால் சுட்ட இடத்தையும் மாஜிஸ்திரேட் நேரடியாக சென்று ஆய்வு செய்ய உள்ளார். என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட  நீராவி முருகன் மீது  பெண்களை மிரட்டி வழிப்பறி செய்வது, கொலை மிரட்டல், கொலை, கொள்ளை என 60க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது