உசிலம்பட்டி அருகே சுடுகாட்டில் 40 ஆயிரம் ரூபாய் பணத்துடன் எரிந்த நிலையில் பெண் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையா தற்கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.






 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த எழுமலை நாயக்கர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடுகாட்டில் சுமார் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த எழுமலை காவல் நிலைய காவலர்கள் எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த உடலின் அருகே மண்ணெண்ணெய் கேன், தீப்பெட்டி மற்றும் ரூ.40 ஆயிரம் மதிக்கத்தக்க 500 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் காணப்பட்டதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில் இந்த பெண் யார்? கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 


 

சுடுகாட்டில் அடையாளம் தெரியாத பெண் கையில் 40 ஆயிரம் ரூபாய் பணத்துடன் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பெண்ணை எரிந்து கொலை செய்தது போல் தெரிகிறது. எனவே குற்றவாளிகளை கண்டரிய மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உசிலம்பட்டி எழுமலை பகுதியில் நடைபெற்ற சம்பவத்தைப் போல் கடந்த சில வாரங்களுக்கு முன் கொட்டாம்பட்டி பகுதியில் நடைபெற்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.