விழுப்புரம் : மயிலம் அருகே வனவிலங்குகளை இறைச்சிக்காக வேட்டையாட வைத்திருந்த ஐந்து நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், இது தொடர்பாக நரிக்குறவர் ஒருவரை கைது செய்தனர்.
நாட்டு வெடிகுண்டுகள்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வன சரக எல்லைக்குட்பட்ட மயிலம்- கூட்டேரிப்பட்டு சாலையில் வனச்சரக அலுவலர் புவனேஸ்வர் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக நடந்து சென்ற நரிக்குறவர் ஒருவர் வேட்டையாட பயன்படுத்தும் லைட் உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்ததால், சந்தேகம் அடைந்து, அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் ஐந்து நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
காரணம் என்ன?
அவரிடம் நடத்திய விசாரணையில், மயிலம் ஜே.ஜே நகர் நரிக்குறவர் பகுதியை சேர்ந்த ஐஸ் மகன் மணி (54) என்பதும், நாட்டு வெடிகுண்டில் ஆட்டு இறைச்சியின் கொழுப்பை தடவி வயல்வெளி பகுதியில் வைத்தால் அதனை காட்டுப்பன்றி, நரி உள்ளிட்ட வனவிலங்குகள் கடிக்கும் பொழுது நாட்டு வெடிகுண்டு வெடிப்பதில் காயமடைந்து அந்த விலங்குகள் இறக்க நேரிடும்.
அவற்றின் இறைச்சியை விற்பனை செய்வதற்காக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை வன சரக அலுவலகத்திற்கு அழைத்து சென்ற வனத்துறையினர், நாட்டு வெடிகுண்டு, லைட் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.