நாக்பூரில் ரூ.5000க்கு  சிறுமியை விற்ற கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. அந்தச் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றபோது அவரை போலீஸ் இன்ஃபார்மர் உதவியுடன் காப்பாற்றியுள்ளது காவல்துறை.


மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 11 வயது சிறுமி. அவரின் தாயாருக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த அந்தச் சிறுமிக்கு தாய்க்கு மருந்து வாங்க பணத்திற்கு என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை. சிறுமியின் தாய்க்கு ஏற்பட்டிருக்கும் நோயும், சிறுமியின் நிலவரமும் அக்கம்பக்கத்தினருக்கும் தெரிந்திருந்தது. இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் அதே பகுதியில் இருந்த அர்ச்சனா என்ற பெண். பாலியல் தொழிலில் சிறுமிகளுக்கு என்று தனி மார்க்கெட் இருக்கிறதாம். அதனால், 11 வயதே நிரம்பிய சிறுமியை புதிதாக பாலியல் தொழிலில் இறக்கினால் நல்ல பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டு இன்னும் சில இடைத்தரகர்களோடு சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.


அப்போது அந்தச் சிறுமியின் அண்டை வீட்டைச் சேர்ந்த அர்ச்சனா என்ற பெண் சிறுமிக்கு உதவுவதாகக் கூறியுள்ளார். சிறுமியின் தாயிடம் பேசிய அர்ச்சனா, தனது மகனின் பிறந்தநாள் விழா வருகிறது. அன்றைய தினம் மகனைப் பார்த்துக் கொள்ள ஆள் தேவை. அதற்காக சிறுமியை அழைத்துச் செல்கிறேன். அதற்கு கூலியாக ரூ.5000 தருகிறேன் என்று கூறியுள்ளார். சிறுமியின் தாயாரும் சதியை அறியாமல் சரியென்று அனுப்பியுள்ளார்.




அர்ச்சனா, ரஞ்சனா, கவிதா ஆகிய மூவர் அச்சிறுமியை கொராடி ஓம் நகர் எனும் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஏற்கெனவே சிறுமியைப் பற்றி பாலியல் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளனர். தகவல் பலருக்கும் வாட்ஸ் அப் மூலம் பரவ ஒரு நபர் ரூ.40,000 தருவதாகக் கூறியுள்ளார். அந்த நபரிடமே சிறுமியை அனுப்புவது என்று பேசி முடிக்கப்பட்டது. சிறுமி பாலியல் தொழிலுக்குப் புதிது என்பதால் அவருக்கு இவ்வளவு பெரிய தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 


அந்த மூன்று பெண்களும் சொன்ன இடத்துக்கு அந்த நபர் வர சிறுமியை அவரிடன் அனுப்பியுள்ளனர். ஆனால், அந்த நபர் ஒரு போலீஸ் இன்ஃபார்மர். அவர் உடனே போலீஸுக்கு தகவல் சொல்ல அந்த வீட்டை போலீஸார் சுற்றி வளைத்தனர். உடனடியாக சிறுமியும் போலீஸ் பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டார்.


சிறுமி தற்போது அரசு காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார். அர்ச்சனா, ரஞ்சனா இருவரும் சிறையில் தான் அறிமுகமாகியுள்ளனர். இருவருமே பாலியல் குற்றங்களுக்காகச் சிறை சென்றவர்கள். சிறையிலிருந்து திரும்பிய பின்னரும் கூட அவர்கள் அதே தொழிலில் தான் நீடித்து வந்துள்ளனர்.