நாகப்பட்டினம்: உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் திருமணம் செய்துகொண்ட பெங்களூரைச் சேர்ந்த காதல் ஜோடியைத் தேடி வந்த பெண்ணின் குடும்பத்தினர், அவர்கள் தங்கியிருந்த தனியார் விடுதியில் புகுந்து, மணமகனின் குடும்பத்தினர் மீது சரமாரியாகக் கத்தியால் வெட்டியதோடு, மணமகளையும் வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்ற சம்பவம் வேளாங்கண்ணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் மணமகன் உட்பட நான்கு பேர் பலத்த வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

காதல் மற்றும் மத வேறுபாடு

பெங்களூரு, நாகவாரா பகுதியைச் சேர்ந்த டேனியல் என்பவரின் மகன் ராகுல் (கிறிஸ்தவ மதம்) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜாராவ் என்பவரின் மகள் கீர்த்தணா (இந்து மதம்) ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த இவர்களின் காதலுக்கு, ராகுலின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்த நிலையில், கீர்த்தணாவின் குடும்பத்தார் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், மணமகன் பெற்றோர் சம்மதத்துடன் தங்கள் திருமணத்தை நடத்தி முடிக்கும் நோக்கில், இந்தக் காதல் ஜோடி பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு வந்துள்ளது.

Continues below advertisement

வேளாங்கண்ணியில் திருமணம்

காதலன் ராகுலுடன் அவரது குடும்பத்தினரான பெற்றோர், சித்தப்பா, சித்தி, தங்கை உட்பட மொத்தம் 8 பேர் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணிக்கு வந்தனர். உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ராகுலுக்கும் கீர்த்தணாவுக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

திருமணம் முடிந்த பின்னர், மணமக்களும் ராகுலின் குடும்பத்தினரும் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறையெடுத்துத் தங்கியிருந்தனர்.

விடுதிக்குள் புகுந்து தாக்குதல்

திருமணம் குறித்த தகவல் எப்படியோ பெங்களூரில் உள்ள கீர்த்தணாவின் குடும்பத்தாருக்குத் தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கீர்த்தணாவின் குடும்பத்தாரைச் சேர்ந்த சுமார் 15 பேர் கொண்ட கும்பல், உடனடியாக பெங்களூரில் இருந்து புறப்பட்டு இன்று அதிகாலை வேளாங்கண்ணிக்கு வந்துள்ளது.

அவர்கள், ராகுல் குடும்பத்தினர் தங்கியிருந்த தனியார் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து, கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். கையில் வைத்திருந்த கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால், காதலன் ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்தக் கத்தி வீச்சு சம்பவத்தால் விடுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

தாக்குதலின் உச்சகட்டமாக, அவர்கள் மணமகள் கீர்த்தணாவையும் வலுக்கட்டாயமாகத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

நான்கு பேர் படுகாயம்

இந்தத் தாக்குதலைத் தடுக்க முயன்ற மணமகன் ராகுல், அவரது தந்தை டேனியல், சித்தப்பா பிரகாஷ், மற்றும் தாய் கலையரசி ஆகியோர் பலத்த வெட்டுக் காயங்களுக்கு ஆளாகி, ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடினர்.

உடனடியாக அங்கிருந்தவர்கள் உதவியுடன் படுகாயமடைந்த நால்வரும் நாகை ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

போலீஸ் வழக்குப்பதிவு

காதல் திருமணத்தை எதிர்த்து நடந்த இந்தச் சண்டையிலும், கத்திக்குத்துச் சம்பவத்திலும், மணமகள் கடத்தப்பட்ட விவகாரத்திலும் வேளாங்கண்ணியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார், உடனடியாகத் தனியார் தங்கும் விடுதிக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் கடத்திச் செல்லப்பட்ட மணமகள் கீர்த்தணா ஆகியோரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

வேறு மாநிலத்தைச் சேர்ந்த காதல் ஜோடி திருமணம் செய்த விவகாரத்தில், வேளாங்கண்ணி போன்ற ஒரு புனித ஸ்தலத்தில் நடந்த இந்த கத்தி வீச்சு மற்றும் கடத்தல் சம்பவம், இரு வேறு மதத்தைச் சேர்ந்த காதலர்கள் திருமணம் செய்துகொண்டால் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மீண்டும் ஒருமுறை கேள்வி எழுப்பியுள்ளது.