கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி சென்னையில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றவர் ராமச்சந்திரன். இவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த நிலையில், நாகை அருகே ஆதமங்கலம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள ஆதமங்கலம் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் இராமச்சந்திரன் 27 வயதான இவர் பொறியியல் பட்டதாரி. இவர் சென்னை மறைமலை நகர் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். குரோம்பேட்டை பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மகள் சுவேதா கல்லூரி மாணவியான இருவரும் கடந்த 2019 ம் ஆண்டு சென்னையில் இருந்து மயிலாடுதுறை ரயிலில் சென்ற போது இருவரும் அறிமுகமாகி செல்போன் எண்களை பெற்றுக்கொண்டு வாட்ஸ் அப் , போன் மூலம் பேசி நாளைடைவில் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
ராமச்சந்திரன் சுவேதாவுக்காகவே சென்னையில் தங்கி வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சுவேதா ராமச்சந்திரனோடு பேசுவதை நிறுத்திக் கொண்டார். மேலும் அவரது செல்போன் தொடர்பு கொண்டால் பிஸியாகவே இருந்துள்ளது. இதனால் சுவேதா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ராமச்சந்திரன் சுவேதா செல்போனை சோதனை செய்த போது பெண் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு நம்பருக்கு சுவேதா அடிக்கடி பேசியது தெரிய வந்துள்ளது. அந்த நம்பரை எடுத்து ராமச்சந்திரன் பேசிய போது டேனியல் என்ற இளைஞர் பேசி உள்ளார். யார் என்று விசாரித்த போது சுவேதாவின் நண்பர் என்று கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் சுவேதாவிடம் கேட்ட போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சுவேதா ராமச்சந்திரனிடம் உனக்கும் எனக்கும் ஒத்து வராது காதலை பிரேக்கப் செய்துக் கொள்ளலாம் என கூறி ராமச்சந்திரனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் தனக்கு கிடைக்காத சுவேதா யாருக்கும் கிடைக்க கூடாது என்று சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகே சுவேதாவும் ராமச்சந்திரனும் பேசி கொண்டிருத்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது காதலியின் கழுத்தை அறுத்து தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதில் சுவேதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சென்னை செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார். இந்த நிலையில் ஜாமினில் வெளி வந்தவர் தனது சொந்த ஊரான நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ஆதமங்கலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து வந்துள்ளார். எப்போதும் இறந்த தனது காதலி சுவேதாவின் நினைவாகவே இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரவு வீட்டில் படுத்திருந்த இவர் திடீரென காணாமல் போனதால் பெற்றோர் இவரை தேடிச் சென்றுள்ளனர். அப்போது வீட்டின் பின்புறப் பகுதியில் உள்ள புளியமரம் ஒன்றில் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிய நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தாரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பாக வலிவலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சென்னையில் தனது காதலியை கொன்றுவிட்டு சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்த காதலன் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.