திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த பெருங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி வயது (55), இவருடைய மனைவி அம்சா. இவர் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு தண்டபாணி வீட்டை உட்புறமாக பூட்டிக்கொண்டு மனைவி, குழந்தைகளுடன் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கியுள்ளனர். அப்போது காலையில் விடிந்தவுடன் கீழே இறங்கி வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்ட தண்டபாணி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோ இருக்கும் அறைக்கு சென்று பார்த்துள்ளார். பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் கீழே சிதறிக்கிடந்தது. பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் ஹாலில் வைத்திருந்த எல்இடி டிவி (LED TV) ஆகியவை திருடி போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


 




 


அதேபோன்று தண்டபாணியின் பக்கத்து வீட்டை சேர்ந்த சக்கரபாணி என்பவர் வீட்டிலும் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர் சக்கரபாணியின் பீரோவில் இருந்த ஒரு சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். மேலும் அதே பகுதியில் உள்ள கருணாகரன் என்பவர் வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 6 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் எல்இடி டிவி ஆகியவற்றை திருடு போனது தெரியவந்தது. ஒரே நாள் நள்ளிரவில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் மர்ம ஆசாமிகள் புகுந்து நகை மற்றும் பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மூன்று நபர்களும் தனித்தனியாக தானிப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தண்டராம்பட்டு ஆய்வாளர் தனலட்சுமி, துணை ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று திருடு போன வீடுகளில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 




 


ஒரே தெருவில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் நகை, டிவிகள் மற்றும் பணம் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தண்டராம்பட்டு, தானிப்பாடி ஆகிய பகுதிகளில் அடிக்கடி இது போன்று வீடு புகுந்து திருடும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருவதால் காவல்துறையினர் தீவிரோ ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். தானிப்பாடி காவல் நிலையத்திற்கு பகுதிக்குட்பட்ட பெருங்குளத்தூர் பகுதியில் காப்புக்காடு இருப்பதால் நகை திருடிய மர்ம ஆசாமிகள் அந்த காட்டுக்குள் சென்று பதுங்கிக் கொள்வதாக கூறப்படுகிறது. எனவே இரவு நேரங்களில் இந்த பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனி கவனம் செலுத்தி தண்டராம்பட்டு தானிப்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இதுபோன்ற திருடு சம்பவங்கள் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.