ஏழு அடுக்கு பாதுகாப்பு

 

சென்னை விமான நிலையத்தில் இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த ஏழு அடுக்கு பாதுகாப்பை  தாண்டி, இலங்கையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்குள் புகுந்து, சுமார் 4 மணி நேரம் உள்ளே சுற்றியதோடு, குடியுரிமை அலுவலக ஊழியர் ஒருவரின் செல்போனை திருட முயன்றதாக கூறப்படுகிறது, குடியுரிமை அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள், சம்பந்தப்பட்ட நபரை பிடித்தது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



 

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில், ஏழாம் எண் கேட் வழியாக, நேற்று மாலை 6 மணி அளவில், இளைஞர் ஒருவர் விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். அந்த இளைஞரிடம் விமான டிக்கெட், அல்லது உள்ளே நுழைவதற்கான சிறப்பு அனுமதி பாஸ் எதுவும் இல்லை. ஆனாலும் அந்த ஏழாம் எண் கேட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளைத் தாண்டி அந்த இளைஞர் வந்துள்ளார்.

 

உள்ளே சுற்றித்திரிந்த இளைஞர்

 

இந்த நிலையில் அந்த இளைஞர் உள்ளே சென்று பாதுகாப்பு சோதனை, சுங்கச் சோதனை ஆகிய பகுதிகளை கடந்து, குடியுரிமை சோதனை நடக்கும் கவுண்டர் பகுதி வரை சென்று, அங்கு சுற்றி அலைந்து கொண்டிருந்தார். ஆனால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை இன்டலிஜென்ட் அதிகாரிகளோ, அந்த இளைஞரை கண்டு கொள்ளவில்லை. இதற்கிடையே அந்த இளைஞர், நேற்று இரவு 10 மணியளவில் குடியுரிமை அலுவலக கவுண்டர் பகுதியில் நின்று, ஊழியர் ஒருவரின் செல்போனை திருட முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது குடியுரிமை ஊழியர்கள், மற்றும் விமான நிலைய ஊழியர்கள், அந்த இளைஞரை மடக்கி பிடித்து, சென்னை விமான நிலைய மேலாளர் அறையில் ஒப்படைத்தனர்.



இலங்கையை சேர்ந்த நபர்

 

விமான நிலைய மேலாளர் விசாரணை நடத்தியபோது, அந்த இளைஞர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தினேஷ் ஞானசூரியன் (35). இவர் கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி இலங்கையிலிருந்து சென்னை வந்துள்ளார். சென்னை எழும்பூரில் இவர் தங்கி இருக்கிறார். மேலும் அந்த இளைஞரை சோதனை நடத்தியபோது, அவரிடம்  இரண்டு ஸ்டிக்கர்களை கைப்பற்றியுள்ளனர். இதைஅடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகள், மத்திய மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள், கியூ பிரஞ்ச் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த இலங்கை இளைஞர் 3 மாத விசாவில், இலங்கையில் இருந்து சென்னை வந்துள்ளதாக தெரியவந்தது. மேலும் இவர் எதற்காக, யாரைப் பார்க்க சென்னை வந்தார்? என்பது தெரியவில்லை.



 

7 அடுக்கு பாதுகாப்பு மீறல்

 

இதற்கிடையே விமான நிலையத்தில் 7  அடுக்கு பாதுகாப்பு முறை அமுலில் இருக்கும் இந்த காலகட்டத்தில், எந்தவிதமான ஆவணமும் இல்லாமல், இந்த  இளைஞர் எப்படி உள்ளே சென்றார்? பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், இவரை எப்படி உள்ளே அனுப்பினார்கள்?  இந்த இளைஞர் ஏற்கனவே, இதைப்போல் சென்னை விமான நிலையத்திற்குள் அடிக்கடி வந்து சென்றுள்ளாரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து, பி சி ஏ எஸ் எனப்படும் பீரோ ஆப் சிவில் ஏவியன் செக்யூரிட்டி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.