விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கண்டாச்சிமேடு மதுரா ஈச்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (45).விவசாயி. இவர் நேற்று இரவு வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறி சென்றார். அதன் பின்னர் இரவு நீண்டநேரமாகியும் சிவக்குமார் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் சிவக்குமாரை தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கல்லடிகுப்பம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் சிவக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் . இன்று காலை அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் சிவக்குமார் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே சிவகுமார் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து சிவகுமார் உறவினர்கள் பெரியதச்சூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.




அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்த சிவக்குமாரின் உடலை பார்வையிட்டனர். அவரது உடலில் தலை, மார்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் இருந்தன. இதையடுத்து சிவக்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் பெரிய தச்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிவக்குமார் எப்படி இறந்தார்? அவரை யாரேனும் அடித்து கொலை செய்தனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




திண்டிவனத்தில் வெள்ளிக்கிழமை ரெளடி மா்மமான முறையில் இறந்து கிடந்தார். திண்டிவனம் கிடங்கல் இரண்டு பகுதியைச் சோ்ந்த பாண்டுரங்கன் மகன் தம்பிதுரை(35).  ரெளடியான இவா் மீது அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி, இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால், மனமுடைந்த தம்பிதுரை மது பழக்கத்துக்கு ஆளாகினா். இந்த நிலையில், திண்டிவனம் உழவா் சந்தைக்குப் பின்புறம் வெள்ளிக்கிழமை தம்பிதுரை மா்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரித்தனா். பின்னா், சடலத்தை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். தம்பிதுரையின் மரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.




விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இது போன்ற மர்ம மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, செஞ்சி அருகே ஒரு விவசாயி, அதைத்தொடர்ந்து திண்டிவனத்தில் பிரபல ரவுடி மர்மமான முறையில்  இறந்து கிடந்தனர். இச்சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மர்ம மரணம் குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருவதாக துணை காவல் கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்