திருவண்ணாமலைக்கு அருகில் பட்டியல் இனத்தைச் சார்ந்த முதியவர் மர்மமான முறையில் மரணம். முதியவரின் உடலை உடற் கூறு ஆய்வு மருத்துவக்குழு முன்னணியில் வீடியோவுடன் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த பெருங்குளத்தூர் கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சங்கோதி வயது (55). இவர், இளையாங்கண்ணி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், இளையாங்கண்ணி அடுத்த தட்டரணை கிராமத்தில் இறந்து கிடந்தது கடந்த 24-ம் தேதி தெரியவந்தது. அவரது உடலில் காயம் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சந்தேக மரணம் பிரிவில் வழக்கு பதிவு செய்து தானிப்பாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தொழிலாளி சங்கோதியை 3 பேர் கும்பல் அடித்து கொலை செய்துள்ளதாக கூறி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தலித் விடுதலை இயக்கத்தினர் நேற்று முன் தினம் முற்றுகையிட்டனர்.




 


அப்போது அவர்கள், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதரிஷினியிடம் மனு அளித்தனர். அவர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்துள்ளனர். இந்நிலையில், சங்கோதி மரணத்துக்கு நீதி கேட்டு அவரது வீட்டின் முன்பு தலித் விடுதலை இயக்கத்தினர், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள், தங்களது கோரிக்கையை ஏற்று காவல்துறை நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்றனர். இதனால், அக்கிராமத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். 



இந்நிலையில் சங்கோதியின் மகன் தனது தந்தையை தொந்தி மற்றும் ஆனந்தன் ஆகிய இருவரும் கொலை செய்துள்ளதாகவும், அவரது உடலில் காயங்கள் இருந்த போதும், தானிப்பாடி போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் கூறி, தாங்கள் கூறும் மருத்துவரைக் கொண்டு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என சங்கோதியின் மகன் சின்னமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில்,தனது தந்தைக்கும், தொந்தி மற்றும் ஆனந்தன் ஆகியோருக்கு முன் விரோதம் இருந்துள்ளதாகவும், தனது தந்தை கையில் கிடைத்தால் கொன்று விடுவோம் என இருவரும் மிரட்டியதாகவும், அடுத்த சில மணி நேரங்களில் தனது தந்தை சங்கோதி,ஆனந்தனின் நிலத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.


தனது தந்தை சங்கோதியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும், தாங்கள் தெரிவிக்கும் மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, போலீசார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதாகவும், போலீசார் யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.




 


மேலும், விசாரணைக்கு மனுதாரர் தரப்பில் ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். இருதரபு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி மருத்துவமனை மூத்த உதவி பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர், விழுப்புரம் மருத்துவ கல்லூரி தடவியல் நிபுணர் ஆகியோர் கொண்ட குழுவினர், சங்கோதியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்ய அறிவுறுத்திய நீதிபதி, 24 மணி நேரத்திற்குள் பிரேத பரிசோதனை அறிக்கைதை போலீசாருக்கு வழங்கவேண்டும் என்றும் 48 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். மேலும் சட்டப்படி இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட்ட நீதிபதி, விசாரணை நிலை குறித்த அறிக்கையையுடன், பதில்மனுவையும் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு, மனு மீதான விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும் சங்கோதியின் உடல் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்படவுள்ளது.