உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரதட்சனை கேட்டு மனைவியை கணவரே வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கில் கணவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, வரதட்சணைக்காக மனைவியைக் கொலை செய்த வழக்கில் கணவன் மற்றும் அவரது பெற்றோருக்கு மரண தண்டனை விதித்தார்.


மேலும், மூவருக்கும் மொத்தம் ₹1.80 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி ரவிக்குமார் திவாகர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.


மே 1, 2024 அன்று ஃபராவை அவரது கணவர் மக்‌ஷத் அலி, மாமனார் சபீர் அலி மற்றும் மாமியார் மசிதன் 'ஹம்ஷ்ரீன்' ஆகியோர் அவர்களது வீட்டில் வெட்டிக் கொன்றதாகக் கூறப்படுகிறது.


இதுகுறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் “இந்த வழக்கில் கடுமையான தண்டனை வழங்கப்படாவிட்டால், பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமல் போய்விடும். மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும், வேறு ஒருவருக்கு இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்கவும் இந்த மரண தண்டனை வழங்கப்படுகிறது" என்று கூறியது.


மேலும், “இதுபோன்ற வழக்குகளில் (வரதட்சணை மரணங்கள்) கருணை காட்டப்பட்டால், அது வரதட்சணை கொலைகளில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும்” என நீதிமன்றம் தெரிவித்தது.


நீதிமன்றத்தில் மாநில அரசின் சார்பாக அரசு வழக்கறிஞர் திகம்பர் சிங் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, 2022ஆம் ஆண்டு மே மாதம் ஃபராஹ் என்ற பெண்ணுக்கும் மக்‌ஷத் அலி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, ஃபராஹ் கணவரும் மாமியாரும் வரதட்சணையாக பணமும் மோட்டார் சைக்கிளும் கேட்கத் தொடங்கியுள்ளனர்.


ஃபராஹ்வின் குடும்ப உறுப்பினர்கள் இந்த விஷயத்தை மணமகனின் பெற்றோரிடம் எடுத்துச் சென்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தங்கள் உதவியற்ற தன்மையை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.


இதைத்தொடர்ந்து தான் ஏற்பட்ட சண்டையில் மனைவியை கணவர் வெட்டிக்கொன்றதாக தெரிகிறது.