மும்பை அருகே 32 வயதுடைய பெண் ஒருவர் கடனை திருப்பி கொடுக்க தவறியதால் 4 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணை கடத்தி சென்று கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவல்:
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின்படி, ”கடந்த அக்டோபர் 19 ம் தேதியன்று மும்பையை அடுத்த செம்பூர், செத்தா நகரில் உள்ள எனது வீட்டிற்குள் இரண்டு பெண்கள் உட்பட நான்கு பேர் புகுந்து, எனது கணவர் அவர்களிடம் கடன் வாங்கிய பணத்தைக் கேட்கத் தொடங்கினர். அப்போது என்னிடம் பணம் இல்லை என்று கூறியவுடன் தனித்தனியாக என்னை தாக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து, என்னை கொடூரமாக தாக்கிய நால்வரும் ஒரு ஆட்டோரிக்ஷாவிற்குள் வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டு, குர்லாவில் உள்ள புந்தரா பவனில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்” என்று தெரிவித்தார்.
உலோக வளையலால் முகத்தில் குத்தி தாக்குதல்:
தொடர்ந்து காவல்துறையினர் தெரிவித்ததாவது, “குற்றம் சாட்டப்பட்ட சபா மற்றும் அஃப்ரீன் என இரண்டு பெண்கள் தற்போது அடையாளம் காணப்பட்டனர். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை ஒரு நாற்காலியில் கட்டிவைத்துள்ளனர். அதன் பிறகு மூன்றாவது குற்றவாளியான இம்ரான் அந்த பெண்ணின் முகத்தில் உலோக வளையலை (கடா) பயன்படுத்தி குத்தியுள்ளார். குத்தியதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உதடு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. நான்காவது குற்றவாளியான அர்பாஸ், பாதிக்கப்பட்ட பெண் அணிந்திருந்த பர்தாவை கிழித்துள்ளார். தனது கணவர் ரூ.7,000 கடன் வாங்கியதால், சபா மற்றும் அஃப்ரீன் இருவரும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், ஆனால் தங்களின் மோசமான பொருளாதார நிலை காரணமாக, அவரால் சரியான நேரத்தில் பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை என பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையத்தில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் வீட்டிற்கு வந்தபோது, தனது மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் நடந்ததை அறிந்ததும், கடத்தி சென்ற நால்வரையும் தொடர்பு கொண்டார். அப்போதும், அவர்கள் மனைவியை விட்டு செல்ல மறுத்ததால் அவர் அவர்களை சந்தித்து கடன் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்தார்.
இரண்டு பெண்கள் கைது:
பணம் கொடுத்த பிறகு தனது மனைவிக்கு நடந்த கொடூரத்தை பார்த்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் தனது மனைவியுடன் திலக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாருக்கு பின் சபா மற்றும் அஃப்ரீனை கைது செய்ததாகவும், ஆனால் மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகிறோம்” போலீசார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்த நான்கு பேர் மீதும் பிரிவுகள் 363 (கடத்தல்), 354 (ஒரு பெண்ணின் அடக்கத்தை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் அல்லது கிரிமினல் வழக்கு), 409 (ஒரு வணிகர் அல்லது முகவரால் கிரிமினல் நம்பிக்கை மீறல்), 452 (காயப்படுத்துதல், தாக்குதல் அல்லது தாக்குதலுக்குத் தயாரான பிறகு வீடு-அத்துமீறல் தவறான கட்டுப்பாடு), 324 (ஆபத்தான ஆயுதங்களால் தானாக முன்வந்து காயம் ஏற்படுத்துதல்) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 34 (பொது நோக்கம்) வழக்கு பதிவு செய்தனர்.