மும்பை மாதுங்கா பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவர், தனது நண்பர்கள் உதவியுடன், 22 வயது இளைஞனை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம், கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி, மாதுங்கா மற்றும் சியோன் ரயில் பாதைகளுக்கு இடையே நடந்திருக்கிறது.
தனது குடும்பத்துடன் மாதுங்கா சஞ்சய் காந்தி நகர் பகுதியில் வசித்து வந்த சுந்தர்( 22 ) நாயுடு, தாதர் சந்தைப் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார்.
சித்தார்த் என்பவர் டிட்வாலா பகுதியில் தனது பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார். இதில் சித்தார்த்தின் அம்மா மட்டும் சஞ்சய் காந்தி நகர் பகுதியில் வசித்து வந்த நிலையில், சித்தார்த் மட்டும் அவ்வப்போது அங்கு வந்து அவரை பார்த்து விட்டு சென்றதாக தெரிகிறது. இதனிடையே சுந்தர் நாயுடுவுக்கும், சித்தார்த் குடும்பத்திற்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் சண்டை மூண்டிருக்கிறது. இந்த சண்டையில், சித்தார்த் காய்கறி வியாபாரியின் மனைவியை மிரட்டியதாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவத்திற்கு பிறகு கோபத்துடன் இருந்த நாயுடு, ரயில் நிலையத்தின் அருகே தூங்கிக்கொண்டிருந்த சித்தார்த்தின் மீது மூங்கில் குச்சிகள், கத்தி, மற்றும் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே, அவர் உயிரிழந்தார். இதனையறிந்த சித்தார்த்தின் பாட்டி இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவத்தில் நாயுடுவை கைது செய்துள்ள போலீசார், மீதமுள்ளவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்