வைஃபை ஹாட்ஸ்பாட் பாஸ்வேர்டு பகிர மறுத்ததால் மும்பையில் 17 வயது சிறுவன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


மும்பை காமாத்தே பகுதியில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் விஷால் ராஜ்குமார் மவுரியா. இவர் மொபைல் போன் பயன்படுத்திக் கொண்டிருந்த போது இரண்டு பேர் அவரிடம் வைஃபை ஹாட்ஸ்பாட் பாஸ்வேர்டு பகிருமாறு கோரியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே அந்த சிறுவனை மற்ற இருவரும் சேர்ந்து கத்தியால் குத்தியுள்ளனர். ஆனாலும் கத்திக் குத்து பெற்ற சிறுவன் அங்கிருந்து ஓடியுள்ளார். ஆனால் சிறிது தூரத்தில் அவர் சரிந்து விழுந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த நபர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.


இதனை மும்பை நாவி ஜோன் 1 டிசிபி விவேக் பன்சாரே ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் உறுதி செய்தார். 



இணையம் எனும் அசுரன்:


அதிக அளவு இணையதளத்தைப் பயன்படுத்துவதும், இணையம் இல்லாமல் இருக்க முடியாது என்பதும், மது, புகைபோல் ஓர் அடிமைப் பழக்கம்தான். ஒரு வாரத்துக்கு 38.5 மணிநேரத்துக்கும் அதிகமாக இணையதளத்தைப் பயன்படுத்துகிறவர், மனத்தளவில் அதற்கு அடிமையாக இருப்பார் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 


பெரும்பாலான குழந்தைகள் செல்போன் மற்ரும் லேப்டாப் தொடர்ந்து பார்ப்பதால், ‘மாறுகண்,ஒன்றரைக் கண் மற்றும் கிட்டப்பார்வை’ பாதிப்புகள் பலமடங்கு அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில் 23.8% குழந்தைகள் படுக்கையில் இருக்கும்போது ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று அண்மையில் மத்திய அரசு தெரிவித்தது. மேலும், 23.80% குழந்தைகள் படுக்கையில் இருக்கும்போதும், தூங்குவதற்கு முன்பும் ஸ்மார்ட் போன்களைப் பயன் படுத்துகிறார்கள். இது வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது மற்றும் 37.15% குழந்தைகள், எப்போதும் அல்லது அடிக்கடி, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் கவனம் செலுத்தும் அளவு குறைகிறது. தொற்று நோய்களின் போது குழந்தைகளிடையே செல்போன் பயன்பாடு அதிகரிக்கிறது. இதன் விளைவாக இணைய அடிமையாதல் அதிகரிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.