18 வயதை எட்டாத கல்லூரி மாணவனை காதல் திருமணம் செய்துகொண்டு, தலைமறைவாக இருந்து வந்த கர்ப்பிணிப் பெண் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.


சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் முதலாமாண்டில் படித்து வந்த இந்த மாணவன் சென்ற ஏப்ரல் 6ஆம் தேதி திடீரென மாயமானார்.


கல்லூரிக்குச் சென்று நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாத நிலையில், அவரது பெற்றோர் மகனைக் காணவில்லை என பயத்தில் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் காவல் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.


இந்நிலையில் மாணவனின் பெற்றோர் ஹேபியஸ் கார்பஸ் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து, மாணவனின் நட்பு வட்டாரத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ளத் தொடங்கினர்.


ஆனால் மாணவனுடன் படிக்கும் மாணவர்களுடன் அதிக பழக்கமோ, பெரிய நட்பு வட்டாரமோ இல்லை என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதனையடுத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவன் இருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவருடன் இளம்பெண் ஒருவரும் இருந்தது தெரிய வந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.


அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டபோது, கல்லூரியில் படித்தபோது இருவரும் காதலில் விழுந்த நிலையில், தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துகொண்டு வாழலாம் என முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறியது தெரிய வந்தது.


இருவரும் தலைமறைவான சமயத்தில் கல்லூரி மாணவனுக்கு 18 வயது முடிய 3 மாதம் இருந்த நிலையில், இருவரும் வீட்டை விட்டு வெளியேறியதுடன்,  திருமணம் செய்துகொண்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகையில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.


இந்நிலையில், கல்லூரி மாணவன் வீட்டிலிருந்து மாயமான நேரத்தில் அவருக்கு 18 வயது நிரம்பிடாத நிலையில்,  சிறுவனை கடத்திச்சென்று திருமணம் செய்த கல்லூரி மாணவியை போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.


தற்போது கல்லூரி மாணவி மூன்று மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.