பெண்ணை கொலை செய்து உடலை சாக்கு மூட்டையில் கட்டி அதை ரயில்வே டிராக்கில் வீசிச் சென்ற கொடூரம் மும்பையில் நடந்துள்ளது. வாசிக்கும்போதே சைக்கோ த்ரில்லர் எஃப்கட்டில் இருக்கும் இந்தக் குற்றச் செயல் குறித்து போலீஸார் விவரித்துள்ளனர். அந்த குற்றவாளியையும் கைது செய்துள்ளனர். 


போலீஸ் கூறியதாவது:


சரிகா தாமோதர் சால்கே. வயது 21. இவர் கோரேகான் கிழக்கில் உள்ள ஃபில்ம் சிட்டி அருகே இருக்கும் சந்தோஷ் நகரில் வசித்து வந்தார். அதே பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் சரிகா பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார். அதே குடியிருப்பில் விகாஷ் கைர்னார் ஹவுஸ்கீப்பராக வேலை செய்து வந்தார். 


இந்நிலையில் சரிகாவை காணவில்லை என்று அவரது கணவர் கடந்த 23 ஆம் தேதி (மே 23) அன்று போலீஸில் புகார் கொடுத்தார். இந்நிலையில் தான் 24 ஆம் தேதி காலை கோரேகான் மாஹிம் இடையேயான ரயில்வே தண்டவாளத்தில் ஒரு இளம் பெண்ணின் சடலம் சாக்கு மூட்டையில் கட்டியபடி கிடந்ததை ரயில்வே போலீஸார் கண்டனர். சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். அப்போது கோரேகான் காவல் நிலையத்திற்கும் இத்தகவல் செல்ல, சரிகாவின் கணவரைக் கூட்டிக் கொண்டு போலீஸார் மார்ச்சுவரிக்கு சென்றனர். அங்கே சரிகாவை அவரது கணவர் அடையாளம் காட்டினார். 


இதனையடுத்து போலீஸார் விசாரணையை தொடங்கினர். விசாரணையை அவர் வேலை செய்த குடியிருப்பில் இருந்தே ஆரம்பித்தனர். அப்போது அங்கே ஹவுஸ்கீப்பராக இருந்த விகாஷ் கைர்னாரிடம் விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் சொல்ல அவரிடம் போலீஸ் பாணி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் உண்மைகளை ஒப்புக் கொண்டார்.




3வது மாடியில் தீர்த்துக் கட்டிய ஹவுஸ்கீப்பர்


சம்பவம் பற்றி விகாஷ் கூறும்போது, என்னிடம் சரிகா ரூ.3000 கடன் வாங்கி இருந்தார். அதை நீண்ட நாட்களாக திரும்பத் தரவில்லை. இதனால் அடிக்கடி வாக்குவாதம் வந்தது. அன்றைக்கும் நான் சரிகாவிடம் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டேன். அதற்கு அவர் ஆத்திரமூட்டும் வகையில் பேசினார். எனக்கு சரிகா மீது ஒருதலை காதல் இருந்தது. அதனால் தான் அவருக்கு பணம் கொடுத்தேன். ஆனால், அவர் என்னை ஏமாற்றி வந்தார். என்னை அவமானப்படுத்தினார். அதனால் அன்றைக்கு அவர் மூன்றாவது மாடியில் இருப்பதை அறிந்து அங்கு சென்றேன். மதியம் மூன்று மணி இருக்கும். குடியிருப்பில் ஆள் நடமாட்டம் இல்லை. அந்தப் பெண் கழிவறை செல்லும் நேரம் பார்த்து அங்கே வைத்து அவரை கொலை செய்தேன். பின்னர் சடலத்தை ஒரு சாக்கில் கட்டினேன். இரண்டு மூன்று சாக்கு வாங்கி அதில் உடல் வெளியே தெரியாதபடிக்கு மறைத்தேன். பின்னர் ஒரு ஆட்டோவில் அந்த சடலத்தை ஏற்றினேன். ரயில்வே நிலையத்திற்கு சென்று அங்கு ஒரு லோக்கல் ட்ரெய்னில் ஏறினேன். ஆள் அரவமின்றி ட்ரெயின் சென்ற வேளையில் ரயிலில் இருந்து அந்த சாக்குமூட்டையை டிராக்கில் வீசினேன். பின்னர் இயல்பாக வீட்டுக்கு வந்துவிட்டேன் என்றார்.


ரயில்வே நிலைய சிசிடிவி காட்சிகளையும், குடியிருப்பு சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்த போது விகாஷ் தான் குற்றவாளி என்பது உறுதியானது.