மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அம்போலி பகுதியை சேர்ந்தவர் சாந்தனுகிருஷ்ண சேஷாத்ரி. 54 வயது ஆகும் இவர் தனியார் நிறுவனத்தில் உதவி பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி ஜெய்ஷீலா என்பவர் ஆவார். இந்த தம்பதியினருக்கு 26 வயதில் ஒரு மகன் உள்ளார். பொறியியல் பட்டதாரியான அவர்களது மகன் பெயர் அரவிந்த். இந்நிலையில், சேஷாத்ரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினர், சேஷத்ரியின் மனைவி மற்றும் மகனிடம் விசாரணை நடத்தினர். விசாணையில் சேஷாத்ரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவித்தனர். சேஷாத்ரி இதற்கு முன்னதாகவும் பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என்றும் அவர்கள் காப்பாற்றி அழைத்து வருவார்கள் என்றும் தெரிவித்து இருந்தனர். அவர்கள் இருவரும் கூறுவதில் சந்தேகம் இருப்பதாக உணர்ந்த காவல் துறையினர் விசாரணைக்கு பிறகு, அவர்களது வீட்டில் சோதனை நடத்தினர். வீட்டை சோதனை செய்ததில் அவர்கள் வீட்டு வாஷிங் மிஷினில் சேஷாத்ரியின் சட்டை ஒன்று ரத்தக் கறையுடன் இருந்தது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட சட்டையினால் சந்தேகமடைந்த போலீசார் ஜெய்ஷீலா மற்றும் அரவிந்திடம் நடத்திய குறுக்கு விசாரணையில், இருவரும் சேஷாத்ரியை கொலை செய்துவிட்டு உடலை மாடியில் இருந்து தூக்கி எறிந்த உண்மை தெரியவந்தது. மேலும் விசாரணையில், சேஷாத்ரிக்கும் மனைவி மற்றும் மகனுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு பல வாக்குவாதம் வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அம்மாவும் மகனும் நேற்று முன்தினம் அவரை கொலை செய்துள்ளனர். அதிகாலை 4 மணியளவில் பிரச்சனை முற்றியதில், சேஷாத்ரியின் தலையை கட்டிலில் முட்டி பலமாக தாக்கி உள்ளனர். தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் சேஷாத்ரி மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதனால், பயந்துப்போன ஜெய்ஷீலா மற்றும் அரவிந்த் சேஷாத்ரி இருவரும் உடலை 7-வது மாடியில் இருந்து தூக்கி வீசி தடயத்தை அழிக்க முயன்றுள்ளனர் என்பது காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மகனின் கல்லூரி மேற்படிப்புக்கான கட்டணத்தை செலுத்த மறுத்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம். நடந்த தகராற்றில் கொலை செயத்துவிட்டு அம்மாவும் மகனும் சட்டையை வாஷிங் மெஷினில் போட்டுவிட்டு, சேஷாத்ரியின் உடலை ஏழாவது மாடியில் இருந்து தூக்கி வீசி, போலீசாருக்கு அவர்களே தகவல் தெரிவித்திருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சேஷாத்ரியின் மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர். கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு இருவரிடமும் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவி மற்றும் மகனின் செயல் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.