காதலியை கயிற்றால் கழுத்தை நெரித்து, பிளம்பிங் கருவியால் தலையில் அடித்து காதலன் தப்பிச்சென்ற சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.
30 வயதுடைய நபர் ஒருவர் தனது காதலியை முதலில் கயிற்றால் கழுத்தை நெரித்து பின்னர் தலையணையால் நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் ஒரு ஹோட்டல் ரூமில் நடந்துள்ளது. காதலி உயிர் பிழைக்கப் போராடத் தொடங்கியபோது, காதலன் தனது பையில் இருந்து ஒரு பிளம்பிங் கருவியை எடுத்து, இடது காதுக்கு மேல் அவரது தலையில் அடித்ததால் அதிக ரத்த இழப்பு ஏற்பட்டது. காதலன் தலைமறைவாக இருப்பதால் கொலைக்கான காரணம் தெரியவில்லை.
ஹோட்டல் அறையில் உள்ள படுக்கையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த அறையில் இருந்து ரத்தக்கறை படிந்த படுக்கை விரிப்பை போலீசார் மீட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை மதியம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றபோது, டிவியில் சவுண்ட் மிக அதிகமாக இருந்ததாகவும், கொலையின் சத்தத்தை மூழ்கடிக்க கொலையாளி சவுண்ட்யை அதிகரித்திருக்கலாம் என்றும் விசாரணைக்கு வந்த போலீஸ் அதிகாரி கூறினார்.
கொலை செய்யப்பட்ட 27 வயதான சயாலி ஷஹாசனே ஒரு கணினி பொறியாளர். குற்றம் சாட்டப்பட்ட சாகர் அருண் நாயக் ஒரு இயந்திர பொறியாளர் ஆவார். பெண்னின் தந்தை கூறுகையில், “அவர்கள் இருவரும் வசையில் உள்ள கமானில் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர். ஆனால் திடீரென்று என்ன தவறு நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறினார்.
கொலை நடந்த ஹோட்டலின் உரிமையாளர் கூறுகையில், 'இந்த ஜோடி நள்ளிரவில் 208 ரூமிற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்தனர். அவர்கள் 7 ஆண்டுகளாக வழக்கமான விருந்தினர்கள். ஒரு முறை வருவார்கள் அல்லது ஒரே இரவில் தங்குவதற்கு ஒரு மாதத்திற்கு இரண்டு முறை வருவார்கள். அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களைத் தெரியும். பிப்ரவரி 27ஆம் தேதி இந்த ஜோடி ஒரே அறையில் இருந்தனர். அருண் நாயக் ரூமில் சில பானங்கள் மற்றும் உணவை ஆர்டர் செய்தார். மாலை 5.30 மணிக்கு, அவர் பில் கேட்டார், மாலை 6 மணிக்கு அவர் கவுண்டரில் இறங்கி, ஒரு ஆப் மூலம் பணம் செலுத்தி விட்டுச் சென்றார். மறுநாள் காலை, ரூமில் இருந்து எந்த அசைவும் இல்லை என்பதை நாங்கள் கவனித்தோம். இரவு முழுவதும் டிவி சவுண்ட் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்ததால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும், இண்டர்காம் அழைப்புகளுக்கு யாரும் பதிலளிக்கவில்லை. உடனே, காவல்துறைக்கு தகவல் கொடுத்தோம். பின்னர், வந்த போலீசார் மாஸ்டர் சாவியின் உதவியுடன் கதவைத் திறந்தனர். பின்னர் பெண் விருந்தினர் கொல்லப்பட்டதை அறிந்தோம்” என்று கூறினார்.
தப்பியோடிய காதலன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளி ஒரு கயிறு மற்றும் ஒரு சுத்தியல் போன்ற பிளம்பிங் கருவியை எடுத்துச் சென்றதால், இரக்கமற்ற முறையில் அவரை கொலை செய்ததால், இது திட்டமிட்ட கொலை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்