24 வயது பெண் வளர்க்கும் நாய் தேவையில்லாமல் குரைத்ததாகவும், தங்கள் குழந்தையை காயப்படுத்தியதாகவும் கூறி அந்த பெண்ணைத் தாக்கியதாக கணவன்-மனைவி இருவர் மீது பாண்டுப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 


நாய் குரைத்ததால் தாக்குதல்


ஆனால் நாயை வளர்க்கும் பெண்ணான சிம்ரன் மற்றும் அவரது குடும்பத்தினர் கூறுகையில், தம்பதிகளின் குழந்தை நாயுடன் விளையாடுவதாகவும், நாய் அவரை தாக்கவில்லை என்றும், நாய் யாரையும் பார்த்து குரைக்கவில்லை என்றும் கூறினர். அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படும் தம்பதியினர் ஹனீப் கான் மற்றும் நஜ்மா அதனை மறுத்துள்ளனர். "பெண்ணின் புகாரின்படி நாங்கள் இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்து, ஹனீஃபைக் கைது செய்துள்ளோம். மேலும் விசாரணை நடந்து வருகிறது," என்று பாண்டூப் காவல் நிலையத்தின் மூத்த ஆய்வாளர் நிதின் உன்ஹானே கூறினார். மேலும் ஏற்கனவே ஹனீஃப் மீது பல தாக்குதல் வழக்குகள் மற்றும் ஒரு கொலை வழக்குகள் உள்ளன என்று போலீசார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் சிம்ரன், அவரது தந்தை மற்றும் அவரது சகோதரி நோய்வாய்ப்பட்ட தாத்தாவை சென்று பார்க்கச் சென்றபோது, சிம்ரன் தனியாக இருக்கையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறிது நேரம் கழித்து சிம்ரனும் அவர்களோடு செல்வதாக இருந்த நிலையில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்ததால் செல்லவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



தனியாக இருந்தபோது தாக்குதல்


"நான் புறப்படும்போது, குற்றம் சாட்டப்பட்ட ஹனீஃப் ஒரு சுத்தியலைப் பிடித்துக்கொண்டு தனது மனைவியுடன் நடந்து செல்வதை நான் பார்த்தேன்" என்று சிம்ரனின் சகோதரி சினேகா யாதவ் கூறினார். "ஆனால் அவர்கள் என் சகோதரியை அடிக்கதான் செல்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என் தாத்தா வீட்டிற்கு வெகுநேரம் ஆகியும், சிம்ரன் வராதபோது ஏதோ தவறு இருப்பதாக நாங்கள் உணர்ந்தோம். எனவே, அவளைப் பார்க்க எங்கள் உறவினரை அனுப்பினோம், அங்கு சிம்ரன் பயங்கரமாக தாக்கப்பட்டிருப்பதாக அவர் எங்களுக்குத் தெரிவித்தார்," என்று அவர் மேலும் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: TN Weather Update: உஷார் மக்களே... 13 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்:தமிழ்நாட்டில் கனமழை இருக்கு...!


பெண் மூக்கில் குத்திய தம்பதியினர்


அவரது குடும்பத்தினர் சிம்ரனின் மூக்கில் இருந்து ரத்தம் வருவதைக் கண்டு அதிர்ந்துள்ளனர். ஹனீப்பும் நஜ்மாவும் மீண்டும் மீண்டும் அழைப்பு மணியை அடித்ததாகவும், சிம்ரன் கதவைத் திறந்ததும், அவர்கள் தன்னைத் திட்டியதாகவும் அவர் கூறினார். "நான் அவர்களிடம் விசாரித்தபோது, ​​எங்கள் செல்ல நாய் காரணமாக அவர்களின் குழந்தைக்கு காயம் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்," என்று காயப்பட்ட சிம்ரன் கூறினார். "அந்த நபர் என்னை சுத்தியலால் தாக்க முயன்றார், ஆனால் என் பக்கத்து வீட்டுக்காரர் அவரை தடுத்தார். இது நடப்பதற்கு, அவரது மனைவி என் மூக்கில் குத்தினார், அதனால் தான் ரத்தம் வந்தது," என்று சிம்ரம் மேலும் கூறினார்.



வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது


இதுகுறித்து அவரது தங்கை சினேகா கூறுகையில், "சிம்பாவை (செல்லமாக வளர்க்கும் நாய்) நாங்கள் 9-10 மாதங்களுக்கு முன்பு தத்தெடுத்தோம். எனது அக்காவை தாக்கிய தம்பதியின் மகன் உட்பட அந்த கட்டிடத்தில் உள்ள அனைவருடனும் சிம்பா விளையாடுகிறான். அவர்கள் சிம்பா குரைத்ததால் வருத்தப்பட்டார்களா அல்லது அவர் தங்கள் குழந்தை அவனோடு விளையாடியதால் வருத்தப்பட்டார்களா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. ஏனென்றால் அந்த நாய் குழந்தைக்கு ஏதேனும் தீங்கு செய்திருந்தால், அவர்கள் அதைப் பற்றி புகார் செய்திருப்பார்கள்," என்றார். போலீசாரிடம் சிம்ரன் அளித்த வாக்குமூலத்தின்படி, தம்பதியினர் அவரை கட்டையால் அடித்து, அவளையும் அவரது நாயையும் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர். குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பாண்டுப் போலீசார் ஹனீப் மற்றும் நஜ்மா மீது ஐபிசி பிரிவு 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 324 (ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு) மற்றும் 506 ( மரணத்தை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் அதே பில்டிங்கில் வாடகைக்கு வசிக்கிறார் என்றும், கட்டுமான தொழில் செய்து வருகிறார் கூறப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட தம்பதியினர், பெண்ணைத் தாக்கவில்லை என்று மறுத்து வருகின்றனர்.