திருமணத்திற்கு வரன் தேடுவது  தொடர்பான ஆன்லைன் தளங்கள் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகின்றன. அதேசமயத்தில் அந்த தளங்களின் மூலம் சிலர் ஏமாற்றப்படுவதும் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று மீண்டும் நடைபெற்றுள்ளது. இம்முறை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒருவர் 30க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஆன்லைன் தளம் மூலமாக மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. 


மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் சமீபத்தில் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னை ஒருவர் திருமண வரன் தேடும் தளம் மூலம் அறிமுகாமனதாகவும், அவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 2.25 லட்சம் பணம் வாங்கிய ஏமாற்றியதாகவும் தெரிவித்திருந்தார். அவர் அளித்த புகாரின் பெயரில் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தியுள்ளனர். 


அந்த விசாரணையின் போது அந்தப் பெண் பணம் செலுத்திய வங்கி கணக்கு போலியான பெயரில் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் நேரடியாக ஒரு முறை சந்திக்கவில்லை என்பதால் குற்றவாளியின் அடையாளத்தை காவல்துறையினர் கண்டறியவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் அந்த திருமண வரன் தேடும் தளத்தில் இருந்த தகவல் ஆகியவற்றை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அதன்படி விஷால் சௌஹான் என்ற நபர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவர் தன்னுடைய வீட்டை வெளியே பூட்டி கொண்டு உள்ளே வசித்து வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதன்காரணமாக விஷாலை பிடிக்க காவல்துறையினர் உணவு டெலிவரி செய்யும் நபர் போல் வேடமிட்டு விஷாலை பிடித்துள்ளனர். 




அதன்பின்பு அவரிடம் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது அந்த நபரின் உண்மையான பெயர் அனுராஜ் சௌஹான் என்பது தெரியவந்தது. மேலும் அந்த நபர் பொறியியல் மற்றும் எம்பிஏ வரை படித்துள்ளதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அத்துடன் இவர் மராத்தி திருமண வரன் தேடும் தளம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்கள் மூலம் பல பெண்களிடம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்ட பெண்களிடம் இவர் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. அத்துடன் 20 லட்சம் ரூபாய் வரை இவர் மோசடி செய்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 


இவை தவிர சில ஆண்களிடம் குறைந்த விலைக்கு ஐபோன் வாங்கி தருவதாக கூறியும் இவர் 30 லட்சம் வரை ஏமாற்றியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த குற்றங்களுடன் சேர்ந்து இவர் மீது ஏற்கெனவே ஒரு பாலியல் வன்கொடுமை குற்றம் உள்பட நான்கு வழக்குகள் மும்பை காவல்துறையில் பதியப்பட்டுள்ளதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நபர் மூலம் பாதிக்கபட்ட நபர்கள் காவல்துறைக்கு வந்து புகார் அளிக்கலாம் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க: ”எப்படி நடந்துச்சு தெரியுமா?” : தூக்கத்தில் உளறிக்கொட்டிய மனைவி.. கணவன் செய்த காரியம் தெரியுமா?