மஹாராஷ்டிரா மாநிலம் ராஜ்கர் கோட்டையில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.


தர்ஷனா பவார் என்ற 26 வயதான பெண், சமீபத்தில் ரேஞ்ச் வன அதிகாரி பதவிக்கான மஹாராஷ்டிராவில் பொது சேவை ஆணையத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். இந்தநிலையில் இவரது உடலானது ராஜ்கோட் அடிவாரத்தில் முற்றிலும் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பவாரின் உடலை மீட்டெடுத்த காவல்துறையினர் பிரேத பரிசோதனை செய்ததில், இது தற்கொலை அல்ல, கொலை என உறுதி செய்தனர். அவரது உடல் மற்றும் தலையில் ஏற்பட்ட அதிபயங்கர காயங்களால் அவர் இறந்தது தெரியவந்தது. 


ஜூன் 10 முதல் மாயமான தர்ஷனா: 


தர்ஷனா பவார் தேர்வில் முதலிடம் பிடித்ததால் அவரை பாராட்ட திலகர் தெருவில் உள்ள நியூ இங்கிலீஷ் பள்ளியில் உள்ள கணேஷ் ஹாலில் தனியார் அமைப்பினர் திட்டமிட்டு, கடந்த ஜூன் 10ம் தேதி பாராட்டு விழா நடத்தினர். கடந்த ஜூன் 9ம் தேதி நர்ஹே பகுதியில் உள்ள தோழி வீட்டில் தங்கியிருந்த பவார், ஜூன் 10ம் தேதி நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரது தோழி வீட்டுக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, பெற்றோர்கள் அவரை தொலைபேசியில் அழைக்கவே, அதை அவர் ஏற்கவில்லை. 


இதையடுத்து, அந்த தனியார் நிறுவனத்தில் கடந்த ஜூன் 12ம் தேதி பெற்றோர் விசாரித்தனர். நிகழ்ச்சிக்குப் பிறகு பவார் வெளியேறியதாக அந்த தனியார் அமைப்பு தெரிவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தர்ஷனா பவாரின் பெற்றோர்கள் அன்றே சிங்ககாட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 


என்ன நடந்தது..? 


ஜூன் 12ம் தேதி தர்ஷனா பவார் தனது நண்பர் ராகுல் ஹந்தோருடன் ராஜ்கோட்டை பகுதியில் நடைபயிற்சி சென்றுள்ளார். இருவரும் நிகழ்ச்சிக்கு பிறகு பைக்கில் அங்கு சென்றுள்ளனர். காலை 6.10 மணிக்கு ராகுல் ஹந்தோரும், தர்ஷனா பவாரும் ஒன்றாக ராஜ்கருக்குள் இருக்கும் மலைப்பகுதிக்குள் ஒன்றாக நுழைந்துள்ளனர். ஆனால், அதன்பிறகு காலை 10 மணிக்கு ராகுல் மட்டுமே தனியாக வந்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. 
இதற்கு பிறகு ராகுல் எங்கு சென்றார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. ராகுலை கண்டுபிடிக்க 5 தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


யார் இந்த ராகுல்..? 


நாசிக் மாவட்டத்தின் சின்னார் தாலுகாவை சேர்ந்த 25 வயதான ராகுல் ஹண்டோர், புனேவில் சிவில் சர்வீசஸுக்கு தயாராகி கொண்டிருந்த பட்டதாரி ஆவார்.