நடிகர் அர்ஜூன் இயக்கி நடித்து 90’ஸ் கிட்ஸ்களின் பேவரைட் படங்களில் ஒன்றாக வெளியான ‘ஏழுமலை’ படம் வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


ரீமேக் படங்களிலும் கெத்து காட்டிய ‘ஏழுமலை’ 


தெலுங்கில் பி.கோபால் இயக்கி பாலாகிருஷ்ணா, சிம்ரன் நடித்த ‘நரசிம்ம நாயுடு’ படத்தின் ரீமேக் தான் தமிழில் ஏழுமலையாக வெளியாகியது. இந்த படத்தை இயக்கி நடித்திருந்தார். மேலும் ஹீரோயின்களாக  சிம்ரன் , கஜாலா , மும்தாஜ் நடித்த நிலையில், விஜயகுமார், ஆனந்தராஜ் மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மணி சர்மா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 


படத்தின் கதை 


ரவுடிசத்தால் ஊரையே தன் கட்டுப்பாட்டில் ஆஷிஷ் வித்தியார்த்தி வைத்திருக்க, அமைதியை விரும்பும் விஜயகுமார் கிராமத்தை காப்பாற்ற ஒரு கூட்டத்தை அமைக்க விரும்புகிறார். இதில் தன் வீட்டு சார்பில், சிறு வயதில் இருக்கும் அர்ஜூனை தயார் செய்கிறார். இதற்கிடையில் பல ஆண்டுகளுக்குப் பின் நடனப்பள்ளியில் ஆசிரியராக அர்ஜூனை கண்டதும் கஜாலா காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அர்ஜூன் பின்னால் கஜாலா செல்ல அவரை பிடிக்க ஆஷிஷ் வித்தியார்த்தி ஆட்கள் வருகிறார்கள். அவர்கள் அர்ஜூனை கண்டு அலறுகிறார்கள். இதன் பின்னணி என்ன? கஜாலா - அர்ஜூன் இணைந்தார்களா? என்பதை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் பேக்கேஜ் ஆக ‘ஏழுமலை’ காட்சிப்படுத்தியது. 


பிளாஸ்பேக் காட்சிகளில் கொஞ்ச நேரம் வந்தாலும் சிம்ரன் மாஸ் காட்டியிருப்பார். படம் முழுவதும் அர்ஜூனின் ஆக்‌ஷன் காட்சிகள் தான் நிறைந்திருந்தது. ஆக்‌ஷன் கிங்கின் இந்த அவதாரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. 


புல்லரிக்க செய்யும் தீம் மியூசிக்


ஏழுமலை படத்தின் தீம் மியூசிக்கை இன்று கேட்டாலும் 90ஸ் கிட்ஸ்களுக்கு புல்லரிக்க செய்யும். அப்படிப்பட்ட இசையை மணிசர்மா வழங்கியிருப்பார். இதேபோல் எல்லா மலையிலும், உன் புன்னகை, லக்ஸ் பாப்பா போன்ற பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது.  அதேபோல் படத்தில் ஆனந்தராஜ் பேசும் ‘அட உங்கப்பன் தாமிரபரணியில தலைமுழுக’ என வசனமும் பிரபலமாக மாறியது. அப்படிப்பட்ட ஆக்‌ஷன் அவதாரம் ‘ஏழுமலை’ இன்றும் டிவியில் ஒளிபரப்பப்பட்டாலும் முழு படத்தையும் பார்ப்பவர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.