மத்திய பிரதேசத்தை அடுத்த இந்தூர் நகரின் பவர்குவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுவாமிநாராயண் கோயில் வளாகத்தில் வாலிபர் ஒருவர் கைத்துப்பாக்கியால் ஒரு இளம்பெண் மற்றும் ஆண் நபரை சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தீபக் ஜாட் மற்றும் அவரது உறவினர் சகோதரி சினேகா ஜாட் ஆகியோர் தரிசனத்திற்காக சுவாமி நாராயண் கோவில் வளாகத்தை அடைந்தனர். இதற்கிடையில், இருவரும் கோவிலுக்கு வருவது தெரிந்து இவர்களுக்கு அறிமுகமான அபிஷேக் என்ற நபர் அங்கு வந்துள்ளார். இங்கு சில பிரச்னை தொடர்பாக மூவருக்கும் இடையே மிக நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 


வாக்குவாதம் முற்றி வாலிபர் செய்த கொடூர செயல்:


வாக்குவாதம் தொடர்ந்து தகராறாக உருவெடுக்கவே, அபிஷேக் தனது இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து தீபக் மற்றும் சினேகா மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். தீபக்கும் சினேகாவும் தப்பிக்கக்கூட நேரம் கிடைக்காத அளவுக்கு அபிஷேக் இந்த கொடூர தாக்குதலை நிகழ்த்தியுள்ளார். தீபக் மற்றும் சினேகா மீது அபிஷேக் மூன்று முறை தொடர்ந்து துப்பாக்கியால் சுட்ட நிலையில், இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இருவரும் ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்ததை பார்த்ததும், அங்கிருந்த மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் கோயில் முன்புறம் உள்ள கேன்டீனுக்கு சென்ற அபிஷேக் அங்கு தண்ணீர் குடித்தார். இதையடுத்து அவர் அங்கேயே தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைதானே சுட்டு தற்கொலைக்கு முயன்றார்.


கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று காவல்துறையினர் பார்த்தபோது, ​​தீபக்கும், சினேகாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த நிலையில் அபிஷேக் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.


யார் இவர்கள்..? 


தீபக் அகர் மால்வாவில் வசிப்பவர், இவர் ஓரியண்டல் கல்லூரியில் பிஏ படித்து வந்ததாக கூறப்படுகிறது. அபிஷேக் அழைத்ததும் தனது துணைக்காக சினேகா, தனது தூரத்து உறவினரான தீபக்குடன் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்றுள்ளார். முன்னதாக, அபிஷேக்குடன் நெருங்கி சினேகா பேசி வந்ததாகவும், கடந்த சில நாட்களாக சினேகா, அபிஷேக்கிடம் ஒதுங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.  அபிஷேக் ஒரு பொறியியல் மாணவர், இவர் இந்தூரில் வசித்து வந்துள்ளார். சினேகாவும் இந்தூரில் வசித்து வந்தவர் மகாராஜா கல்லூரியில் பொறியியல் படித்து வந்துள்ளார். ஒரே பகுதியில் வசித்து வந்ததால் இருவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 


இதுகுறித்து கூடுதல் போலீஸ் கமிஷனர் அமித் சிங் கூறும்போது, ​​"பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த தற்கொலை செய்துகொண்ட வாலிபரும், சிறுமியும் எப்படி ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானார்கள், எதற்காக இந்த சம்பவத்தை நடத்தது என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவத்தை பார்த்தால் ஒருதலைப்பட்ச காதல் போல் தெரிகிறது."என்றார். 


கோவில் வளாகத்தில் தீபக் மற்றும் சினேகாவை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட அபிஷேக் தனக்கு தெரிந்தவர்களுக்கு செய்தி அனுப்பியது குறிப்பிடத்தக்கது. அதில், "எங்கள் உறவு நன்றாக இருந்தது. எல்லாம் நன்றாக இருந்தது, மகிழ்ச்சியாக வாழ்ந்தோம், சுற்றித் திரிந்தோம். உஜ்ஜயினிக்கு 12 முதல் 13 முறை சென்றோம். தேவாஸ்-மகேஷ்வர் நீர்வீழ்ச்சிகளைப் பார்த்தோம். அப்போதுதான் எங்களுக்குள் மூன்றாவது நபர் இடையே வந்தார்." என்று எழுதியிருந்தார்.


இந்த மூன்றாவது நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செய்தி அவளுடன் இறந்த பெண்ணின் உறவினர் சகோதரனா அல்லது வேறு யாரேனுமா என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.