மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ஐ.ஆர்.எஸ் அதிகாரி மீது அவரது மனைவி வரதட்சணை புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை அன்று போபாலில் உள்ளி மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நீண்ட நாட்களாக வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பது தெரிய வந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த அந்த அதிகாரியின் பெயர் மோஹித் பண்டாஸ் தற்போது வனத்துறையின் துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் போலீஸ் கமிஷனர் சச்சின் அதுல்கர் இந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், மோஹித் பண்டாஸ், அவரது தாய் மற்றும் சகோதரி மீது செவ்வாய்க்கிழமை இரவு வரதட்சணை கொடுமை மற்றும் தாக்குதலுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர் அதிகாரி மீது ஐபிசியின் பிரிவுகள் 498A (ஒரு பெண்ணின் கணவன் அல்லது கணவனின் உறவினர் பெண்ணை கொடுமைப்படுத்துதல்), 323 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.