கடலூர் அருகே தகாத உறவை கைவிட மறுத்த மாமியார் மற்றும் அவரது காதலன் மருமகனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள தொளார் கிராமத்தைச் சேர்ந்தவர்  கொளஞ்சி. இவரது கணவர் ராதாகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார், இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வந்த கொளஞ்சி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு சென்று கூலி வேலை செய்து வந்துள்ளார். 


இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் சன்னாசிநல்லூர் கிராமத்தில்  வாழ்ந்த வந்த இவரது தங்கை சித்ரா இறந்து விட்டதால் அவரது மகள் சீதாவை தன்னுடன் வைத்து வளர்த்து வந்துள்ளார். இதனையடுத்து தொளார் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவரின் மகனான அன்பழகனுக்கு சீதாவை திருமணம் செய்து கொடுத்தார். அவர் டிராக்டர் ஓட்டுநராக உள்ளார். 


இதற்கிடையில் அன்பழகனின் உறவினரான செல்லதுரை என்பவருடன் கொளஞ்சி நெருங்கி பழகியுள்ளார். நாளடைவில் இது தகாத உறவாக மாறியுள்ளது. இதுபற்றி அறிந்த அன்பழகன் கொளஞ்சியை சத்தம் போட்டுள்ளார். ஆனால் அவரோ அதனை கேட்காமல் செல்லதுரையுடான உறவை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கொளஞ்சி வேப்பூர் சாலையில் உள்ள தனது வீட்டுக்கு அருகே பைக்கில் சிறிது தூரம் சென்று செல்லத்துரையுடன் நின்று பேசியுள்ளார். 


அப்போது அவ்வழியாக வந்த அன்பழகன் அதனைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார்.மேலும் தான் ஓட்டி வந்த டிராக்டரை வேகமாக ஓட்டிச் சென்று இருவர் மீது ஏற்றியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கொளஞ்சி இறந்தார். தப்பிய செல்லதுரையை விரட்டிச் சென்று அவர் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்தார்.


தொடர்ந்து ஆவினங்குடி காவல்நிலையம் சென்று அன்பழகன் சரணடைந்தார். இதுதொடர்பான விசாரணையில் அன்பழகனுக்கு உடைந்தையாக இருந்த கொளஞ்சியின் தம்பி முருகேசனும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.