வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் பகுதியை சேர்ந்தவர் 40 வயதான பெண்மணி உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த பன்னிரண்டு  வருடங்களுக்கு முன்பு உஷாவின் கணவர் இறந்த நிலையில் தனது 14  வயது மகளுடன் தனிமையில் வாழ்ந்துவந்த உஷா, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வேலூர் மாநகராட்சி கருகம்பத்துறை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஞானசேகரன் (35) என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, மகளுடன் வாழ்ந்து வருகிறார் உஷா.




இந்நிலையில் ஞானசேகரனின் மூத்த சகோதரரான லோகநாதன் (37) என்பவருக்கு கடந்த 16  வருடங்களுக்கு முன்பு திருமணமாகி , மனைவி மற்றும் ஒரு மகனுடன்  கருகம்பத்துறை பகுதியில் வாழ்ந்து வந்த சூழ்நிலையில் . லோகநாதனின் மனைவி அதே பகுதியை சேர்ந்த வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு, தனது கணவன் லோகநாதன் மற்றும் மகனை பிரிந்து தனியாக வாழந்து வருகிறார். உறவினர்கள் யாரும் இல்லாத சூழ்நிலையில் , தனது 14 வயது மகளுக்கு விரைவில் திருமணம் முடிக்கவேண்டும் என்று தனது இரண்டாவது கணவர் உதவியுடன்  தீவிரமாக மாப்பிள்ளை தேடிவந்த உஷா, வரன் பார்க்கும் இடங்களில் அதிக அளவில் வரதட்சணை கேட்டதால் செய்வதறியாது கவலைப்பட்டதாக தெரிகிறது.


இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு  தனது இரண்டாவது கணவரின் மூத்த சகோதரர் லோகநாதன் உஷாவின் 14 வயது மகளை , வரதட்சணை ஏதுமின்றி திருமணம் செய்ய முன்வந்ததால், வறுமையான சூழ்நிலையில் வாழ்ந்துவந்த  உஷா இதற்கு  சம்மதம் தெரிவித்து, தனது இரண்டாவது கணவரின் ஒத்துழைப்போடு தனது 14  வயது மகளை வீட்டில் வைத்து திருமணம் செய்து கொடுத்துள்ளார். மிகவும் ரகசியமாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுக்கப்பட்ட  சிறுமி தற்பொழுது கருவுற்றதால், சிறுமி கர்ப்பமான செய்தி வெளியில் தெரிந்தால் காவல்துறையினர் நடவடிக்கை பாயும் என்ற அச்சத்தில்,  கருவை கலைக்க 14 வயது சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர் .




சந்தேகத்தின் பேரில் அங்குள்ள மருத்துவர்கள் , வேலூர் சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து . சமூகநலத்துறை அதிகாரிகள் , விரிஞ்சிபுரம் காவல் நிலைய அதிகாரிகள் துணையுடன் , உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து, மருத்துவமனையில் இருந்த சிறுமியின் தாய் உஷா மற்றும் அவரது இரண்டாவது கணவரின் மூத்த சகோதரர் லோகநாதன் ஆகிய இருவரையும் போக்சோ மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் நேற்று மாலை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை அரியூரில் உள்ள அரசு குழந்தைகள்  காப்பகத்தில் தங்கவைத்து அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர் .


வறுமையின் காரணமாக சொந்த மகளை, திருமணமான 37 வயது நிரம்பிய கணவரின் மூத்த சகோதரருக்கு திருமணம் செய்துவைத்த சம்பவம் விரிஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .