பொதுப் பாதையை ஆக்கிரமித்து கொலை மிரட்டல் விடுப்பவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென குழந்தைகள் உள்பட 10-க்கும்  மேற்பட்டோர் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.




தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வேப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பூதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த திலகவதி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தங்களது விவசாய நிலத்தில் வசித்து வருகின்றனர்.  கிராமத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக 12 அடி சாலையை காலங்காலமாக  பயன்படுத்தி வந்துள்ளனர்.  இந்தப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற வேடியப்பன் கோயிலுக்கு தலைமுறை தலைமுறையாக மக்கள் அடிக்கடி சென்று வருகின்றனர்.  இந்நிலையில் அந்தப் பகுதியில் கண்ணன் என்பவரும், அவரது குடும்பத்தினரும் விவசாய நிலம் வாங்கியதோடு,  பொதுமக்கள் செல்லும் 12 அடி பாதையை அவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  சாலையை ஆக்கிரமித்துள்ள அவர்கள் பொதுமக்கள் அவ்வழியாகச் செல்வதற்கு இடையூறு கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பத்து குடும்பத்தினரும் வருவாய்த்துறை, காவல் துறை என மாவட்ட ஆட்சியர் வரை மனு அளித்துள்ளனர். ஆனாலும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


இந்நிலையில், பொதுமக்கள் செல்லும் வழியில் கண்ணன் குடும்பத்தைச் சார்ந்த சங்கர் என்பவர் பாதையை ஆக்கிரமித்து  கடந்த சில நாட்களாக வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளார். இதை அந்த பகுதியில் உள்ள மக்கள் கேட்டபோது இந்த பாதை எங்களுக்கு சொந்தமானது. இதில் யாரும் வரக்கூடாது. மீறி வந்தால், டிராக்டரை மேலே ஏற்றி கொலை செய்து விடுவேன் என்றும், நீங்கள் எங்கு சென்று புகார் கொடுத்தாலும் எதுவும் செய்ய முடியாது எனவும் மிரட்டிள்ளார். மேலும் கண்ணன் குடும்பத்தை சேர்ந்த ரவி என்பவர், அரூர் வருவாய் கோட்டாட்சியரின் ஓட்டுநராக இருப்பதால், எங்கு சென்று புகார் கொடுத்தாலும், எதுவும் செய்ய முடியாது என கூறி மிரட்டுவதாக கூறப்படுகிறது.




மேலும், எங்கு புகார் கொடுத்தாலும் வருவாய் கோட்டாட்சியர் ஓட்டுநர் ரவியின் தூண்டுதலின் பேரில் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், பொதுப் பாதையை ஆக்கிரமித்துள்ள கண்ணன் குடும்பத்தினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  புகார் கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திலகவதி மற்றும் சிறுமிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர் சந்திரன் துரிதமாக அவர்களை காப்பாற்றினார். அப்பொழுது தீப்பொறி பட்டதில் சந்திரனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. 




இதனைத் தொடர்ந்து அனைவரையும் பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு துறையினர், அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அனைவரையும் தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப் பாதையை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளிக் குழந்தைகள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.