சென்னையில் பட்டதாரி இளைஞரிடம் ஆன்லைன் மூலம் ரூ.1.86 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்த இக்காலக்கட்டத்தின் பண மோசடிகள் விதவிதமான வகைகளில் நடைபெற்று தான் வருகின்றன.என்னதான் மத்திய, மாநில அரசுகள் இதனை தடுக்க நடவடிக்கைகள் எடுத்தாலும் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து தான் வருகிறது. கொடுக்கல் வாங்கல், சீட்டு மோசடி என காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு மாறிப்போன நிகழ்வுகள் இன்று மக்கள் அனைவரது கையிலும் புழங்கும் ஆண்ட்ராய்டு மொபைல் மூலமாக மிக எளிதாக நடைபெறுகிறது.
மொபைலுக்கு வரும் குறுஞ்செய்திகள், தங்களுக்கு பரிசு விழுந்துள்ளது.அதனைப் பெற இவ்வளவு பணம் கட்டுங்கள், இந்த லிங்கை தொடுங்கள் என சொல்லப்படும் தகவலை நம்பி ஏமாறுவோர் நம்மைச் சுற்றி நிறையப் பேர் உள்ளனர். அந்த வகையில் சென்னையில் பட்டதாரி இளைஞரிடம் ரூ.1.80 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புளியந்தோப்பு டி.கே. முதலி தெருவில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார்.அவர் அங்குள்ள தனியார் பிளைவுட் கம்பெனியில் காசாளராக பணியாற்று வந்தார்.
இதனிடையே கடந்த ஜூலை 20 ஆம் தேதி ராமகிருஷ்ணன் செல்போனுக்கு ஒரு மெசெஜ் வந்துள்ளது. அதில் மாதம் 8 ஆயிரம் சம்பாதிக்கலாம் என்று இருந்துள்ளது. அதனை திறந்து பார்த்த போது உள்ளே ஒரு லிங்க் இருந்துள்ளது. அதனை ஓபன் செய்து பார்த்துள்ளார். அப்போது அதனுள் நீங்கள் எவ்வளவு பணம் இந்த வெப்சைடில் அப்லோட் செய்கிறீர்களோ, அதற்கு ஏற்ற பணம் இரட்டிப்பாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ராமகிருஷ்ணன் முதலில் ரூ.100 பணத்தை அனுப்பியுள்ளார். உடனடியாக அவருக்கு 200 ரூபாய் கிடைத்துள்ளது. மீண்டும் ரூ.200 அனுப்ப ரூ.400 திருப்பி வந்துள்ளது. இதனால் ஆசை அதிகரிக்கவே தொடர்ந்து ஆயிரம், ஐந்தாயிரம்,25 ஆயிரம் என அனுப்பியுள்ளார். கடைசியாக ரூ.50 ஆயிரம் வந்துள்ளது. அத்துடன் முடித்துக் கொள்ளலாமென ராமகிருஷ்ணன் கூற எதிர்முறையில் அந்த வெப்சைடில் பேசியவர்கள் இன்று உங்களுக்கு அதிர்ஷ்ட நாளாக உள்ளது. அதனால் எவ்வளவு பணம் அனுப்ப முடியுமோ அனுப்புமாறு தெரிவித்துளனர்.
அவரிடம் போதுமான பணம் இல்லாததால் திருவண்ணாமலையில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் போன் செய்து பணத்தைப் பெற்று அந்த வெப்சைடில் அனுப்பியுள்ளார். கடைசியாக ரூ.1,86,840ஐ அனுப்பியுள்ளார். பின் வேலை இருந்ததால் அந்த வெப்சைடை கவனிக்காமல் விட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து ஆன்லைன் சென்று பண பரிவர்த்தனை வெப்சைட்டை ஓபன் செய்துள்ளார். அது திறக்காமல் இருந்துள்ளது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தும் அது ஓபன் ஆகாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்