நாட்டின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ளது புதிய உஸ்மான்புர் பகுதி. இந்த பகுதியில் வசித்து வந்தவர் ப்ரமோத். அவருக்கு வயது 47. இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் 21 வயது பெண் ஒருவர் பேசியுள்ளார். அவர் ப்ரமோத் தனக்கு பாலியல் தொல்லை அளித்து துன்புறுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
போலீஸ் ஜீப்பில் இருந்து தப்பிய குற்றவாளி:
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ப்ரமோத்தை பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல போலீஸ் ஜீப்பில் ஏற்றிச் சென்றனர். போலீசார் அழைத்துச் செல்லும்போது ப்ரமோத் குடிபோதையில் இருந்துள்ளார். இதனால், அவர் வாந்தி எடுத்துக் கொண்டு தள்ளாடியபடி இருந்துள்ளார்
அப்போது, மதுபோதையில் இருந்த அவர் போலீசிடம் இருந்து தப்ப வேண்டும் என்பதற்காக போலீசின் ஜீப்பில் இருந்து குதித்துள்ளார். மதுபோதையில் போலீஸ் ஜீப்பில் இருந்த குதித்த அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் ஜாக் ப்ரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சிகிச்சைக்காக அலைக்கழிப்பு:
காயத்தின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு அவர் காயமடைந்த ப்ரமோத்தை குரு தேக் பகதூர் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் சென்றனர். ஆனால், அங்கு சி.டி.ஸ்கேன் வசதி இல்லாத காரணத்தால் அவர் லோக் நாயக் ஜெய் ப்ரகாஷ் நாராயண் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அந்த மருத்துவமனையில் ஐ.சி.யு. வென்டிலேட்டரும், படுக்கை வசதியும் இல்லாத காரணத்தால் அங்கும் அவரை அனுமதிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்து அவரை ராம் மனோகர் லோகியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கும் அவரை அனுமதிக்க இயலாத சூழல் ஏற்பட்டதால் மீண்டும் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கே மீண்டும் அழைத்து வந்துள்ளனர். சிகிச்சைக்காக அனுமதிப்பதற்காக அவரை பல மருத்துவமனையில் அழைத்துச் சென்றதாலும், உரிய சிகிச்சையை உரிய நேரத்தில் அளிக்க முடியாத சூழல் காரணமாகவும் அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
உயிரிழப்பு:
முறையான மருத்துவமனை கிடைக்காத காரணத்தால் சிகிச்சை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாலும், போலீஸ் ஜீப்பில் இருந்து தப்பி குதித்தாலும் பாலியல் குற்றவாளி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சைக்காக வந்த நபர் மருத்துவமனையில் முறையாக அனுமதிக்கப்படாமல் பல இடங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டது குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதேசமயம், மதுபோதையில் இருந்த பாலியல் குற்றவாளி போலீஸ் ஜீப்பில் இருந்து தப்பி ஓடியபோது காயமடைந்து உயிரிழந்த சம்பவம் குறித்தும் காவல்துறையினரிடம் உயர் அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.